22 ஏப்ரல், 2010

மொபைல் போனில் கனடாவுக்கு பேசிய நளினி: மகளிடமும் பேசியது அம்பலம்








வேலூர் : ராஜிவ் கொலையாளி நளினியிடம் பறிமுதல் செய்த மொபைல் போனில் இருந்து அதிகளவு கனடா நாட்டுக்கு பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள், வேலூர் பெண்கள் சிறைக்கு நேற்று வந்து விசாரணை நடத்தினர். நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன்கள், சிம் கார்டுகளை ஆய்வு செய்தனர். அதில், நளினி வைத்திருந்தது புதிய ரக 'நோக்கியோ' மொபைல் போன் என்பதும், அது இயங்கிய நிலையில் இருந்தது என்றும் சிங்கப்பூர் எண்ணில் அவர் பேசிக் கொண்டிருந்ததும், சென்னையில் பதிவு செய்த எண் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. மொபைல் போனில் இருந்து நளினி யார், யாரிடம் பேசினார் என சிறை அதிகாரிகள் சிம்கார்டை ஆய்வு செய்தனர். சமீபகாலமாக நளினி இங்கிலாந்து, கனடா நாடுகளுக்கு அதிகம் பேசியிருப்பது தெரிய வந்தது.

நளினியின் மகள் ஹரித்திரா, லண்டனில் தன் தந்தைவழி உறவினர்களுடன் தங்கி இருக்கிறார். அவருடன் மட்டும் கடந்த மூன்று மாதத்தில் 50 முறை பேசியதும் தெரிய வந்துள்ளது.மேலும், நளினிக்கு அதிகளவில் இலங்கை, கனடா, சிங்கப்பூரில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. தினம் 50 எஸ்.எம்.எஸ்.,கள் வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நளினியை பிடித்தது எப்படி? சென்னை சிறைத்துறை அதிகாரிகளுக்கு, நளினி மொபைல் போன் வைத்திருக்கும் விவரம் ஐந்து நாட்களுக்கு முன் தான் தெரிந்தது. மூன்று நாட்களாக நளினி அறையை சிறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். நளினி, செல்லில் இருக்கும் போது மெல்லிய குரலில் பேசுவது தெரிந்ததும், அவருக்கு தெரியாமல் ஒட்டுக்கேட்ட போது மொபைலில் பேசியது தெரிந்தது.நேற்று முன்தினம் அவரது அறைக்கு அதிரடியாக நுழைந்து ஆய்வு நடத்திய போது மொபைல் போன் சிக்கியது. நளினி, மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது சிறை அதிகாரிகள் வந்து விட்டதால், மொபைலை துணிக்குள் மறைத்துக் கொண்டார்.சிறைக் காவலர்கள் சோதனையிட வந்த போது மொபைலை கழிவறைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி விட்டார். பின், கழிவறை குழாயை உடைத்து தான் மொபைல் போனை எடுத்ததாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைக்குள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி இல்லை என்பதால், அவருக்கு நெருக்கமான சிறைக்காவலர்கள் மூலம் இரு நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.சிறையில் உள்ள நளினிக்கு நெருக்கமான சிறைக் காவலர்கள் மூலமாகத்தான் மொபைல் போன் உள்ளே வந்துள்ளது.இதையடுத்து, நளினிக்கு நெருக்கமான சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடப்பதால், பெண்கள் சிறையில் வேலை பார்ப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சிறை விதிகளின்படி 45 குற்றங்கள் சிறை விதிகள் மீறியதாக கருதப்படுகின்றது. அதில், மொபைல் பயன்படுத்துவதும் ஒன்று. இந்த விதிபடி தவறு செய்தவர்கள் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.'மொபைல் போன் குறித்து விசாரணை முடிந்த பின், பாகாயம் போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நளினியிடம் மொபைல் கைப்பற்றியது தொடர்பாக பத்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்' என, சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

அதிரடி சோதனை: வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீதர், பர்மா சீனு, சிலோன் சேகர், கோல்டு காயின் சூரியா, கட்டபஞ்சாயத்து ராஜா ஆகியோரிடத்திலும் மொபைல் போன் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.வேலூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 போலீசார் வேலூர் பெண்கள் சிறையில் நேற்று காலை 6 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர். காட்பாடி டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில் 100 போலீசார் வேலூர் ஆண்கள் சிறையில் சோதனை நடத்தினர்.ஐந்து மணி நேரம் நடந்த சோதனையில் கஞ்சா, பீடி, சிகரெட், மது பாட்டில்கள் சிக்கியதாக தெரிந்தது.

வக்கீல் மறுப்பு : நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று காலை 11. 30 மணிக்கு பெண்கள் சிறைக்கு வந்தார்.

ஒன்றரை மணி நேரம் நளினியிடம் பேசி விட்டு வெளியே வந்த வக்கீல் புகழேந்தி கூறியதாவது:நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்ததாக வந்த தகவல்களையடுத்து, சிறையில் என்ன நடந்தது என்பதை அவரிடம் கேட்க வந்தேன். மொபைல் போன், சிம் கார்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை' என, நளினி தெரிவித்தார். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம் திட்டமிட்டு நளினி மீது பொய்யான குற்றம் சுமத்தியுள்ளது.நளினி மீது சுமத்தப்பட்ட இந்த பொய்யான குற்றத்தை சட்டரீதியாக எதிர் கொள்வோம். வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம், இங்குள்ள கைதிகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை தலைவருக்கு நளினி கடந்த 12ம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.இதனால், பயந்து போன சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சில வார்டன்கள், நளினியை பழி வாங்க இப்படி பொய்யான குற்றச்சாட்டை நளினி மீது சுமத்தியுள்ளனர். பிரபாகரன் தாயாருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பிரச்னையை திசை திருப்பி விட தமிழக அரசு நளினி மீது குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு புகழேந்தி கூறினார்.

நளினி மீது வழக்கு பதிவு : ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 19 ஆண்டாக தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் இருந்து மொபைல்ஃபோன் மற்றும் இரு சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று இரவு வேலூர் பாகாயம் போலீஸார் நளினி மீது வழக்கு பதிவு செய்தனர். எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் போலீஸார் கூற மறுத்துவிட்டனர்.

மதுரை சிறையில் மொபைல் போன்: மதுரை மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த தண்டனைக் கைதி கருப்புசாமி(33), சிறை கழிவறையில் மொபைலில் பேசிய போது, சிக்கினார். அவரிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அலுவலக பொறுப்பாளர் மாரியப்பன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.மதுரை மத்திய சிறையில் மொபைல் போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவது புதிதல்ல. இதற்கு முன் நடந்த பல சோதனைகளில் மொபைல் போன்கள் சிக்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக