நித்யானந்தா சுவாமியின் நடவடிக்கைகளை சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவிடக் கோரும் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
நித்யானந்தாவின் நடவடிக்கை
நித்யானந்தா சுவாமியையும், நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சமீபத்தில் சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் படங்களும், செய்திகளும் வெளியாகின. நித்யானந்தா பற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டிலும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நித்யானந்தா சுவாமியின் சீடரான நித்யதர்மானந்தா என்கிற லெனின் கருப்பன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ``சர்வதேச உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நித்யானந்தா சுவாமியின் நடவடிக்கைகளை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:-
மனு தள்ளுபடி
நாட்டில் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் அறிவுறுத்தி கூறியபிறகும், இதுபோன்ற சாமியார்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை இன்னமும் சரிசெய்ய முடியவில்லையே என்பது துரதிருஷ்டவசமானது. தங்களது நலனுக்காக அப்பாவி குடிமகன்களை சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக அரசு ஏஜென்சிகள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படும். நித்யானந்தாவின் பக்தரான மனுதாரரின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மோசடி மூலம் கணிசமான பணம் வசூல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ஒரு மத்திய ஏஜென்சி விரிவாக விசாரிக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன்காரணமாக வழக்கு அந்த மாநிலத்திற்கும் மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்த வழக்கு கர்நாடக மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவில் நிலுவையில் உள்ளது. அந்த ஏஜென்சி பற்றியும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு ஏற்ற வழக்காக கருத முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக