1 ஏப்ரல், 2010

அடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்





மு. கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி, திமுகவின் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சிக்கு மட்டுமே உண்டு என்றும், தான் உட்பட எந்த ஒரு தனி நபரும் அது குறித்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது எனவும் கூறியிருக்கிறார்.

மத்திய உரத்துறை அமைச்சரும் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, கருணாநிதிக்கு பிறகு திமுகவில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அண்மையில் கூறியது குறித்தே தனது கருத்துக்களை முதல்வர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அரசுப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியில் இறங்கப்போவதாக கருணாநிதி அறிவித்ததிலிருந்து, அவருக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.


ஸ்டாலின்

நீண்ட காலமாக கட்சிப் பணியில் ஈடுபட்டு இப்போது துணைமுதல்வராகவும் இருக்கும் கருணாநிதியின் இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் அடுத்த திமுக தலைவர் மற்றும் முதல்வராவார் என்று பொதுவாக பேசப்பட்டாலுங்கூட, கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணியில் தீவிரம் காட்டி இப்போது கட்சிப் பொறுப்பையும் பெற்றிருக்கும் மூத்த மகன் அழகிரியோ, தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதன் விளைவாகத்தான் கடந்த வாரம் ஜூனியர் விகடன் தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதிக்குப் பிறகு எவரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்று கூறியது என நம்பப்படுகிறது.

ஆனால் அழகிரி பேட்டி குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நக்கீரன் தமிழிதழ் முதல்வரை பேட்டி கண்டபோது அழகிரியின் கருத்து பற்றி கேள்வி எழுப்ப கட்சியே முடிவு செய்யும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் இருப்பதாக நிலவும் செய்திகள் குறித்து நக்கீரன் பேட்டியாளர் கேட்டபோது கருணாநிதி, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை, அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல என்று மட்டுமே கூறியிருக்கிறார்.


மு.க. அழகிரி

ஓய்வு பெறுவது என்ற தனது முடிவில் மாற்றமில்லை என்பதையும் அவர் சூசகமாக மீண்டும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி தனது திட்டங்கள் குறித்து எதையும் சொல்லமறுத்துவிட்டார் அவர்.

கடந்த ஆகஸ்டிலிருந்து குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஓய்வு பெறுவது உறுதி என்றும், ஒரு முறை ஸ்டாலினே தனது பணியினைத் தொடரவேண்டும் என்ற ரீதியிலும் கருணாநிதி பேசியிருக்கிறார், நான்காவது முறை ஓய்வு பெறுவது என் சொந்த விஷயம் என்றார்.


திமுக ஊர்வலம் ஒன்று

அழகிரியின் ஜூனியர் விகடன் பேட்டி வெளியான பிறகு, கடந்த ஞாயிறன்று, சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போதும் கருணாநிதி ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டி, என் மனதில் நினைக்கிற அனைத்தையும் சிறப்பாக செய்துமுடிக்கிறார். அவரை ஆங்கிலத்தில் டெபுடி சி எம் என்று அழைக்கிறார்கள். நான் அவரை எனக்கு துணையாக இருக்கின்ற முதல்வர் என்றே கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட அவரது உரை பிரதியில் எனக்குத் துணையாக இருக்கின்ற முதல் அமைச்சர் என்றே கருதுகிறேன் என்று அவர் கூறியதாக காணப்பட்டது. இது பற்றியும் நோக்கர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள அழகிரி இன்றிரவு சென்னை திரும்புகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக