1 ஏப்ரல், 2010

இலங்கை தொடர்பில் மிலிபாண்ட் கருத்து





இலங்கை ஜனாதிபதியுடன் டேவிட் மிலிபாண்ட்

இலங்கையில் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்ட் செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டனின் கரிசனைகளை வெளிப்படுத்தினார்.

பிரிட்டனில் வாழுகின்ற இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியின மக்களின் சந்திப்பு ஒன்றை இலங்கைக்கான பிரிட்டிஷ் பிரதமரின் சிறப்புத் தூதுவரான நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஃபொஸ்டர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த சந்திப்பில் வீடியோ மூலம் உரையாற்றிய டேவிட் மிலிபாண்ட் அவர்கள், இலங்கை முன்னுரிமை கொடுக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்
இலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்
இலங்கையில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை வன்செயல்கள் மூலம் கொண்டுவர முடியாது என்று கூறிய மிலிபாண்ட் அவர்கள், அங்கு வன்செயல்கள் குறைக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வன்செயல்கள் இலங்கையில் எந்த சமூகத்துக்கும் பலனைத்தராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் அனைத்து இலங்கையருக்கும் சமமாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


உண்மையான ஜனநாயகம் என்பது, நியாயமான தேர்தல், சுதந்திரமான ஊடகம், மற்றும் சுயாதீனமான நீதித்துறை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தின் பெறுமானங்களில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படல் ஒரு முக்கிய அம்சம் என்றும் டேவிட் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வெளிப்படையான மற்றும் பங்களிப்புடனான ஒரு வணிக உறவைப் பேண ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக கூறிய அவர், ஆனால், மனித உரிமைகள் விவகாரங்கள் காரணமாக ஜி.எஸ்.பிளஸ் சலுகைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுவிட்ட்டதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக