1 ஏப்ரல், 2010

கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனும் கருத்தை அரசாங்கமும் ஏற்பு:மைத்திரி



பயங்கரவாத, பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கு முயற்சிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு துணைபோகும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பதிலளிக்கையில்,

" பயங்கரவாதம், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிவினைவாதத்தை மீண்டும் விதைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த பலர் பயங்கரவாதத்திற்கு கடந்த காலங்களில் துணைபோயிருந்தனர். அந்த நிலைமை கைவிடப்படவேண்டும். பிரிவினைவாதம் மீண்டும் விதைக்கப்படக்கூடாது. இவ்வாறானதொரு நிலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூற்று சரியானதாகும்.

குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. இந்த கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு முயற்சித்தனர்.தவறுகளை திருத்திக்கொண்டு பொறுப்புடன் செயற்படல்வேண்டும்.

இதேவேளை, தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், யுகத்திற்கு தேவையான தலைவரும் சிறந்த தலைவரும் இருக்கின்றார். அவரது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம்.

யுகத்திற்கு தேவையான தலைவர் இருக்கின்ற நிலையில், புதிய தலைவரை தேடவேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு யாரும் தயங்கக் கூடாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக