8 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது



முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.




இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனிதஉரிமைப் பேரவைக் காரியாலத்தில் வைத்து நவனீதம்பிள்ளையை, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சந்திக்கவுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் ஏ.ஜீ.பீரிஸ் ஆகியோரும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் பங்களிப்புக்குத் தேவையான நடவடிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதுகாப்பு படையினர் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவுத்தளபதி ஜெனரல் பொன்சேகாவை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து இலங்கை விளக்கமளிக்கவுள்ளது.


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட ஜே.வீ.பீ உள்ளது

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட ஜே.வீ.பீ தயராகவுள்ளதாகவும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த சில தினங்களில் தீர்மானிக்க உள்ளதாகவும் ஜே.வீ.பீயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரித்ததாகவும் அவருக்கு ஆதரவு வழங்க பல கட்சிகள் முன்வந்தன எனவும் அன்னப்பறவைச் சின்னம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே அந்த கட்சிகக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேற்கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில் தமது கட்சி முனைப்புகளை மேற்கொள்ளும். ஐக்கிய தேசியக் கட்சி யானைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தனது நிலைப்பாட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம்  



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருந்தொகையான மக்கள் வெற்றிபெற ஆதரித்துள்ளமை அவருடைய தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசி சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த புலிகளின் யுகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாதென்றும், கடந்த காலங்களில் புலிகளால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள 97,000அளவிலான வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இழுபறி நிலை


இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள 97,000அளவிலான வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இழுபறி நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மக்கள்; அனைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இடம்பெயரந்த் மக்கள் அனைவரையும் அரசாங்கம் ஜனவரி 31ம் திகதிக்குள் மீள்குடியமர்த்துவதாக கூறியிருந்தது. ஆயினும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் காரணமாகவே இவை தாமதமானதாக, அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை என ஏற்கனவே அரச தரப்பினர் மறுத்திருந்தனர்.


தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மேமாதத்துடன் விடுவிக்கப்படுவர் 



தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மேமாதத்துடன் விடுவிக்கப்படுவர் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். ஒருவருட புனர்வாழ்வு திட்டத்தின் முடிவின் பின்னர், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். குறிப்பாக தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற 11ஆயிரம் முன்னாள் போராளிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.. இந்த சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக