8 பிப்ரவரி, 2010

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி


ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார்.

ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

"இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, சௌபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம். இதனையடுத்து நான் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழ கமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங்கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட்புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்" என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.



தேர்தல் குறித்து வார இறுதியில் ததேகூ கலந்தாலோசனை




எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் நாளை நாடு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்



ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்



பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்.

இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக