9 பிப்ரவரி, 2010


சரத் பொன்சேக்கா கைது






முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படை யாக வைத்தே விசாரணைகளை முன் னெடுப்பதற்காகவே இராணுவ பொலி ஸாரினால் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டி ருக்கும் சரத் பொன்சேக்கா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப் பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.



மன்னார் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்




மீள் எழுச்சித் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 12 கோடி ஒதுக்கீடு
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

மீனவ தொழிலாளர்களுக்கு இதுவரை அமுலில் இருந்த பாஸ் நடைமுறை மற்றும் கெடுபிடிகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே கெடுபிடிகள் இன்றி மன்னார் மாவட்ட மக்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மீனவர்கள் தங்களது அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு பாஸ் ஒன்றை எடுத்தே இதுவரை சென்றுவந்தனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பாஸ் நடைமுறையும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்டத்திற்கு என 12 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களுக்கே இந்த முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேச மீள் நிர்மாண அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்ட மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அரசாங்கம் மன்னார் பி. எம். சி. சோதனைச் சாவடியில் அமுலில் இருந்த சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் அகற்றப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைய இந்தப் பிரதேசத்தின் ஊடாக செல்லும் மக்கள் குறித்த சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.



யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்




உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்திய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார். உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து இலங் கையில் சமாதானத்தையும் அபிவிருத்தி யையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் ரஷ்யாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகமான பெட்ரிக் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

பிரசித்திபெற்ற இலக்கியவாதியான என்டன் செகோவ் ஒருமுறை இலங்கையை சிறிய சொர்க்கமென வர்ணித்துள்ளார். அந்த சொர்க்கம் அங்கு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

உலகின் பொருளாதார ஆய்வாளர்கள் இலங்கையை அபிவிருத்தி வேகத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாகவும் சுற்றுலாப் பயணத்திற்கான முதல்தர நாடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பயங்கரவாதம் காரணமாக பிரிந்துள்ள மனங்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் ரஷ்யா மட்டுமன்றி முழு உலகமும் இணைய வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலக்கியம் மற்றும் கலாசார ரீதியில் இலங்கையும் ரஷ்யாவும் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தன. மீண்டும் அத்தகைய நெருக்கமான நல்லுறவினை ஏற்படுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் பிலிப்போவ், உலகில் சமாதானத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தமையை பெரும் கெளரவமாகவும் வெற்றியாகவும் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விஜயமானது கடந்த 50 வருடங்களுக்கு முன் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய நல்லுறவு மேலும் வலுப்பட உறுதுணையாக அமைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் இவ்விஜயத்தைக் கெளரவப்படுத்தும் வகையில் இலங்கைக்கு வழங்கும் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உலக சமாதானத்திற்கு முன்னுதாரணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறப்பு ஞாபகார்த்த விருதொன்றும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட ரஷ்ய விஜயத்திற்கான தூதுக் குழுவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



யுத்தத்தினால் பாதிப்புற்ற
வடக்கில் அரசாங்க கட்டடங்களை புனரமைக்க ரூ. 175 மில்லியன் ஒதுக்கீடு


இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படு வதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.



அமைச்சர் சமரசிங்க ஜெனீவா பயணம்
பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து நவநீதம்பிள்ளைக்கு இன்று விளக்கம்



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரி வித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார்.

தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார்.

ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே




அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 45 பேர் கைது


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் தருகையில்;

அவுஸ்திரேலிய எல்லைப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 45 பேரும் இலங்கையர் கள் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சரியான தகவல்களை இலங்கைத் தூதரகம் பெற்றுத் தரவேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.

அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முனைந்த 45 இலங்கையர்கள் அந் நாட்டுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவிய போதே வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்த மேலும் 45 பேரை அவுஸ்திரேலிய படையினர் வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த 45 பேரும் நான்கு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி இருந்துள்ளரென அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சு இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் 45 பேரும் இலங்கையர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வெளிவிவகார அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரும் எனவும் அதற்கான பணிப்புரைகளை அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக