30 நவம்பர், 2009

ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டுமானால் எழுத்து மூலம் உறுதி வழங்க வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்


சமூகம் அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வரக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். கடந்த கால வரலாற்றுத் தவறுகள் ஏற்படாத வகையில் எங்களது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வினாயகபுரம் வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயத்திற்கான மணிக்கூட்டு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஆலயத் தலைவர் கு. பிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு எமது கட்சி பல கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளது. அவற்றுக்கான பதில்களை வாய்ப்பேச்சில் இல்லாமல் எழுத்து மூலமே நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையானது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இயங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மக்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். கரையோர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து சிரமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல் வேண்டும். வேலை வாய்ப்பில் இன விகிதாசாரம் ணேப்படல் வேண்டும். கல்வி, பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இவற்றை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கக் கூடிய தகுதி உங்களிடம் உள்ளது. சரியான முடிவு எடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக