30 நவம்பர், 2009

இந்திய கரையோர படையினரால் இலங்கை மீனவர்கள் 68 பேர் கைது-படகுகளில் பிடித்த மீன்களும் பறிமுதல்


இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் மீன் பிடித்தமைக்காக அந்நாட்டு கரையோர காவற்படையினர் 68 இலங்கை மீனவர்களை கைது செய்ததோடு 13 படகுகளையும் அவர்கள் பிடித்த 6,600 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியுள் ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்களது படகுகளுடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

கரையோர காவற்படையின் பிரதம பொதுஜன தொடர்பு அதிகாரி கமாண்டர் ராஜேந்திர நாத் காசிமேடு துறைமுகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ஒருங்கிணைக்கப்பட்ட கடல் மற்றும் ஆகாய மார்க்க ரோந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து கரையோர வேவுக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவற்படை விமானத்தினால் தமிழ் நாட்டின் வட பகுதியிலும் ஆந்திரா பிரதேசத்தின் தென் பகுதியிலும் உள்ள இந்திய கடற்பரப்புக்குள் இந்த இலங்கை மீன் பிடிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

வேவு விமானம் கரையோர காவற்கரைக் கப்பலுக்கு அறிவித்ததையடுத்து ஐ. சி. ஜி. எஸ். விக்ரம் என்ற கப்பல் அவ்விடத்திற்குச் சென்று படகுகளுடன் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை கரையோர காவற்படையினரால் மொத்தம் 553 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 106 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் கமாண்டர் ராஜேந்திர நாத் கடந்த 6 மாதங்களில் மட்டும் 69 படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 359 இலங்கை மீனவர்கள் கை

து செய்யப்பட்டார்கள் என்றும் கூறினார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 547 பேர் 130 படகுகளுடன் பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 40 இலங்கைப் படகுகள் காசிமேடு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த மீனவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்திய கடற்பரப்புக்கள் மீன்பிடிப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் நாத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், தாங்கள் தவறுதலாக இந்திய கடற்பரப்புக்குள் வந்துவிட்டதாகவும் தங்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். காசிமேட்டை சேர்ந்த மீனவர் சி. சைமன் கருத்து தெரிவிக்கையில், இந்திய கரையோர காவற்படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்யும் போது, அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவதுடன் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் எங்கள் பொலிஸாரால் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலங்கை கடற்படையினர் எங்களை பிடிக்கும் போது நடப்பது வேறு. எங்களை நையப்புடைப்பது மட்டுமன்றி எங்கள் படகுகள் திருப்பித் தரப்படுவது பற்றிய பேச்சே இல்லை என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக