புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மாந்தை மக்களுடன் சந்திப்பு-
plote-vavuniya |
மன்னார் மாவட்டத்தின் மாந்தைப் பிரதேசத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), மன்னார் மாவட்டதிற்கான புளொட்டின் அரசியல் பொறுப்பாளர் சிவசம்பு ஆகியோர், செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இந்தவகையில் காத்தான்குளம், வட்டக்கண்டல், பாளையடி புதுக்குளம், பாளையடிமேடு, ஆண்டாங்குளம், ஆட்காட்டிவெளி, நெடுங்கண்டல், பாப்பாமோட்டை, அடம்பன் ஆகிய பிரதேசங்களுக்கு புளொட் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். அப்பகுதிகளுக்கு மீள்குடியேற்றத்திற்கென அழைத்துச் செல்லப்பட்ட மக்களில் ஒருபகுதியினர் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு சென்றிருக்கின்ற போதிலும், மற்றும் ஒருதொகுதி மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகள் இன்னமும் பூரணப்படுத்தப்படாதநிலை, மற்றும் நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாதநிலை போன்ற காரணங்களால் இவர்களை சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று மீள்குடியமர்த்துவதில் தாமதம் நிலவுகின்றது. எனினும் இந்த மக்கள் சுதந்திரமாக அந்தந்த பகுதிகளில் நடமாடுவதற்கு முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் தமக்குப் பல குறைகள் இருந்தாலும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக புளொட் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய குறைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமானது வீட்டு வசதியாகும். மற்றையது தங்களவு விவசாயத் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தங்களிடம் எதுவுமே இல்லையென்பதால், இதற்கான முழமையான உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டுமென்பதாகும். அத்துடன், தாம் கிராமங்களுக்கிடையில் செல்வதென்றால் 5, 6 மைல்கள் நடந்துசெல்ல வேண்டியிருப்பதால் தங்களுக்கு தேவையான பிரயாண வசதிகளை, ஆகக் குறைந்தது குடும்பமொன்றுக்கு தலா ஒரு சைக்கிளாவது பெற்றுத் தரவேண்டுமென்று இம்மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்தபோது தங்களுடைய உழவு, இயந்திரங்கள், லேண்ட் மாஸ்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் தமது வாகனங்கள் என அனைத்தையுமே முல்லைத்தீவை நோக்கிக் கொண்டு சென்றதாகவும், அவை தற்போது அப்பகுதியில் இருப்பதால், அவற்றைத் தங்களுக்கு மீளப் பெற்றுத்தருவதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்போது கருத்துரைத் புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் பவன், புளொட்டின் மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சிவசம்பு ஆகியோர் இம்மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் தீர்ப்பதற்காக குறித்த விடயங்களை வடக்கு மீள்குடியேற்ற செயலணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பசில் ராஜபக்ச அவர்களிடம் எடுத்துக்கூறி, இம்மக்களின் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி வலியுறுத்தி, விரைவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக