3 நவம்பர், 2009

அடுத்த பிரதமராகும் தகுதி எனக்கே உண்டு : அமைச்சர் தி.மு.ஜயரத்னஆதரவாளர்கள் எனக்காகத் தைத்துத் தந்த பிரதமர் உடுப்பு இன்னமும் என் பெட்டகத்தில் இருக்கிறது. அடுத்த பிரதமருக்குத் தகுதியானவன் நான் தான்" என்றார் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி.மு.ஜயரத்ன.

கம்பளையில் நேற்று (02.11.2009) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததர். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இவ்வருடம் இடம் பெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் அடிப்படையில் பார்க்கும் போது மொத்தம் 81 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அரசுகு ஆதரவாக 51 லட்சம் வாக்குகளும் எதிரணிகளுக்கு 31 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. எனவே எதிரணிகளால் எதிர்காலத்தில் 20 லட்சம் வாக்குகளை உடனடியாகத் தம் பக்கம் இழுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

30 வருடகால பிரிவினையைத் தீர்த்து வைத்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்பது உண்மை. அந்த அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ பற்றிய நம்பிக்கையையும் கௌரவத்தையும் எவராலும் குறைவாக மதிப்பிட முடியாது. எனவே இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் மகிந்த ராஜபக்ஷ பற்றிய நல்லபிப்பிராயத்தைக் குறைக்க எவராலும் முடியாது.

இன்று பிரதான அரசியற் கட்சிகளாக ஸ்ரீ.ல.சு.கவும் ஐ.தே.கவுமே உள்ளன. இவற்றில் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கவுடன் இணைந்து போட்டியிட்ட ஜே.வி.பியினர் 39 ஆசனங்களைப் பெற்றனர். ஆனால் அவர்கள் தனித்து நின்று மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்ட போது என்ன நடந்தது?

இன்று ஊடக சுதந்திரம் மறுக்கப்பபடுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இதில் எதுவித உண்மையுமில்லை. காரணம் நாட்டில் பயங்கரவாதம் தாண்டவமாடிய போது எத்தனையோ பேர் கொலை செய்யப்பட்டடனர்; கடத்தப்பட்டார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அவை இன்று ஒழிந்துவிட்டன. எனவே இன்று மனித உரிமை மீறல்கள் உள்ளன என்பது பொய்.

பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவன் தான் நான். காரணம் ஸ்ரீ.ல.சு.க. ஆரம்பிக்கப்பட்ட போது மூன்று செயலாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவராக அல்உறாஜ் பதியுதீன் மஉற்மூத் இருந்தார். அவரது அங்கத்துவ இலக்கம் 12. அவருக்கு அடுத்த படியாக 13ஆம் இலக்க அங்கத்தவன் நானே. 58 வருட காலமாக ஒரே கட்சியில் அங்கம் வகிக்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருமுறை பிரதமர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் எனக்குக் கை கூடவில்லை.எனது ஆதரவாளர்கள் ஒரு சமயம், அடுத்த பிரதமர் நான்தான் எனக்கூறி எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த சமயம், பிரதமர் உடை எனக்கூறி சம்பிரதாய தேசிய உடையை எனக்குத் தந்திருந்தனர்.

அது இன்றும் எனது பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது. இருப்பினும் நாட்டின் மூன்றாவது உயர் பிரஜையாக என்னைப் பதவி உயர்த்தி எனக்கு சபாநாயகர் பதவி தருவதாகக் கூறினர். நான் அதை மறுத்து விட்டேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக