3 நவம்பர், 2009

மூன்றாம் தரப்பிடம் தகவல்களை வெளியிட ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு அதிகாரம் கிடையாதென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-

இலங்கை அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி தம் வசமுள்ள தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் வெளியிடுவதற்கான எவ்வித அதிகாரம் முப்படைகளின் பிரதானியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடையாதென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டு உள்ளகப் பாதுகாப்பு திணைக்களம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான தகவல்களைத் தருமாறு நவம்பர் மாதம் 04ம் திகதி பிற்பகல் 3மணிக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்னரிடம் இன்று வெளிவிவகார அமைச்சினால் விளக்கம் கோரப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது, ஜெனரல் சரத்பொன்சேகாவை நேர்காணலுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை இரத்துச் செய்யுமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் வசமுள்ள சிறப்புத் தகவல்கள் விடயத்தில் முழுமையான அதிகாரம் நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்கு மாத்திரமே இருப்பதாகவும், இதுபோன்ற தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் வெளியிடுவதற்கான உரிமை ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு கிடையாதென்பதே அரசின் நிலைப்பாடென்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக