7 நவம்பர், 2009

பிரான்ஸ் மனித உரிமைகள் தூதுவர் இலங்கை விஜயம்


- பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னார்ட் ஹுச்னர் அவரது மனித உரிமைகள் தூதுவர் பிரன்கோயிஸ் சிமரேயை இலங்கையில் அரசாங்க அதிகாரிகளையும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து சில தகவல்களையும் யோசனைகளையும் சேகரிப்பதற்காக இங்கு அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அகதிகளை அவர்களது விருப்பத்தின் பேரில் மீளக் குடியமர்த்துவதற்கும் சட்ட ஆட்சியை பலப்படுத்துவதற்கும் பிரான்ஸின் உதவியை வழங்க இந்த தகவல்களும் யோசனைகளும் பயன்படும் என்று ஹுச்னர் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சர் ஹுச்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசியாவிலேயே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் இலங்கை மக்கள் இன்னமும் கொடிய யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்த வண்ணம் இருக்கின்றனர். பருவப்பெயர்ச்சி மழைகாலம் நெருங்கும் இவ்வேளையில், இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்தும் வேலைகளை துரிதப்படுத்துவது என்ற இலங்கை அதிகாரிகளின் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களில் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

முகாம்களின் சுகாதார நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. மனிதநேய ஆர்வலர்கள் முகாம்களுக்கு விஜயம் செய்ய முடியாதிருக்கிறது. இதனால்தான் எமது மனித உரிமைகள் தூதுவர் பின்கொயிஸ் சிமரேயை இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலைமை பற்றிய தகவல்களை சேகரித்து வருமாறு கேட்டுள்ளேன். சொந்த வீடுகளுக்கு திரும்ப விரும்பும் சகல அகதிகளையும் மீளக் குடியமர்த்துவது என்ற இலங்கை அதிகாரிகளின் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுவது அவசியம் என்று பிரெஞ்சு அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார். முகாம்கள் தற்போது நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும் என்றும் மனிதநேய அமைப்புக்கள் எதுவித கட்டுப்பாடும் இன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியையும் பாதுகாப்பையும் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் மேற்கொண்ட சர்வதேச மனிதநேய மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான அரசியல் நடைமுறைகள் தினமும் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து பல மாதங்களின் பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல மக்களினதும் இழப்புக்களை ஈடுசெய்யம் வகையில் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் நாட்டில் நல்லிணக்கத்தையும் புனர்நிர்மாண பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹுச்னர் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக