7 நவம்பர், 2009

யுத்தம் முடிந்த பின்னரும் அவசரகால சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல-இரா. சம்பந்தன்


யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனையாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில் நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு .உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்களோ, ஊடகவியலாளர்களோ, அன்றேல் மக்கள் பிரதிநிதிகளோ பார்க்க இயலாது. அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.இடம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது. இவை உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கோரி நிற்கின்றது.

அத்துடன், ஐ.நா.வும் ஏகமனதாக கேட்டுக்கொண்டுள்ளது. முகாமில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த தீ“ர்மானங்களை தாங்களே எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.உறவினர்களுடன் சேர வேண்டுமா? நாண்பர்களுடன் சேர வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு எடுக்க வேண்டும். இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கொண்டே உடைந்த தமது வீடுகளை திருத்திக்கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கலாம். அவர்கள் அங்கு மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஆரம்பிக்கக்கூடும். அந்த உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமையானது இறைமையின் ஓர் அங்கமாகும்.வவுனியாவிலுள்ள முகாம்களை விடவும் இடைத்தங்கல் முகாம்களின் நிலையானது மிகமோசமானது என்பதனால் மக்களை தடுத்து வைத்திருப்பது உகந்தது அல்ல. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அந்த மக்களும் அனுபவிக்க வேண்டும். மிருகங்களை போல தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை ஏற்கமுடியாது. இதுவே சர்வதேசத்தின் முறைப்பாடாக இருக்கின்றது.இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மார்க்கத்தை இழந்துவிட்டனர் என்பதானல் மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சர்வதேச தொண்டு நிறுவனங்களை சு“தந்திரமாக அப்பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் செல்வதை தடுக்க வேண்டாம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்கள் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வரவில்லை, மக்களுக்கே வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன். அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும். ஜனாதிபதி 50 வீதம் வாக்குகளைப்பெற்று ஆட்சியிலிருக்கின்றார். கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாம் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.இங்கு நாகரிகமான ஆட்சியோ, நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ இடம்பெறவில்லை என்பதனாலும் யுத்தம் நிறைவடைந்து விட்டமையினாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இதேவேளை, 10 ஆயிரம் பேர் முதல் 15ஆயிரம் பேர்வரை விசேட தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றன. எனவே, விசேட தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அது அரசாங்கம் செய்யும் பாரிய குற்றமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக