19 நவம்பர், 2009

பொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கொள்ளலாம்-ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க




ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பில் கட்சிக் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு பொது இலக்கை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தை சார்ந்தவர்களுடனும் நாம் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கும் பொது வேட்பாளரை அறிவிப்பதற்குமான நிலைப்பாடுகள் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது இலக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தயாராகவுள்ளனர். எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். பொது வேட்பாளாராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து 17 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து சுயாதீன ஆனைக்குழுக்களை நிறுவுவதோடு இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. நிபந்தனை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை ஐக்கியதேசியக்கட்சி கற்றுக் கொள்வதுடன் இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை எமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் பல எம்மோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரச தரப்பில் சிலரும் எம்மோடிருந்து வெளியேறிய பலரும் இணையவுள்ளனர். அதேவேளை, சில பிரதான எதிர்க்கட்சிகள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொது இலக்குக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோமென்று சவால் விட்ட அரசாங்கத்திற்கு இன்று அதிலிருந்து மீள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த அடுத்த வினாடியே பொது வேட்பாளர் யாரென்பதை நாம் பகிரங்கப்படுத்துவோம். அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். இதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வேட்பாளர் என்பதால் அரச வளங்களை மற்றும் பிரசாரங்களுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாது. இன்று எம்மோடு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளமை மேலும் முன்னணிக்கு பலம் சேர்த்துள்ளது.

எஸ். சதாசிவம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தால் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலை கிடைக்கவில்லை. எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் கூறினார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளோம். எமது முன்னணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

எமது முன்னணியில் 28000 அங்கத்தினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே எமது அபிலாஷையாகும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக