19 நவம்பர், 2009

18.11.2009 தாயகக்குரல் 28

கடந்த பதினைந்தாம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாடு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற மகாநாடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இலங்கை அரசியல் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல சலசலப்புக்களை ஏற்படுத்தி வரும் சூழ்நிலைக்கு மத்தியில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் தேர்தல்கள் நடைபெறலாம் என்ற அமைச்சர்களின் பேச்சுக்களாலும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த தேர்தல் பற்றிய ஊகங்களாலும் தேர்தல் குறித்த அறிவித்தல் மகாநாட்டில் வெளியிடப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புக்கள் இருந்தன.ஆனால் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் மகாநாட்டில் அறிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலும் ஏப்பரல் மாதம் பொது தேர்தலும் நடைபெறலாம் என்றும் எதிர்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் எனவும் அண்மைக்காலங்களில் செய்திகள் வெளி வந்துகொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடலாம் என்ற கருத்துக்களும் வெளிவந்திருந்தன. இந்த நிலையில்தான் முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்ற கேள்விக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று நான்கு வருடகாலம் 19.11.2009 ல் முடிவடைகிறது. அவடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என அரசாங்கத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் கருதுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி எந்த தேர்தலை முதலில் நடத்துவது என மக்கள் அபிப்பிராயத்தை கேட்டுள்ளார். மக்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் என கையை உயர்த்தி தங்கள் அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தனர். மக்கள் விருப்பத்தை கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து கட்சி எடுக்கும் முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த நேரமும் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்தும்; பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் ஆராய்ந்துள்ளது.

சரத் பொன்சேகாவை வேட்பாளராக நியமிப்பது குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் தமது பதவியிலிருந்து விலகவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ; சரத் பொன்சேகா தனது பதவியில்pருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளிக்கமாட்டார் என்ற கருத்து நிலவிய நிலையில் சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளித்து விடையும் கொடுத்துவிட்டார். தனது ராணுவ உடையை கழற்றி இரண்டு நாட்களில் தான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான முடிவை அறிவிப்பேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. உத்தியோகபூர்வமாக அழைப்பு விடவுள்ளதாகவும் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு வழங்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகள் எடுக்கும் முடிவு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் நிலை குறித்து இந்தியத் தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளார். அப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இந்தியத் தலைவர்கள் ரணிலிடம் தமது சந்தேகங்களையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்ஷாவுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய ஒரு வேட்பாளர் வருவதை அவர்கள் வரவேற்பார்;கள். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இலங்கையில் வருவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இந்தியா உட்பட பிராந்திய நாடுகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சதிக்குப் பயந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இந்தியா வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் கருத்து தெரிவிக்கையில் பொன்சேகாவின் கூற்று எவ்விதமான அடிப்படையும் அற்றது. இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து தாங்கள்; வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.கடந்த 14ம் திகதி இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஷாவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்து இருமுனைப் போட்டி ஏற்படுத்துவதன்மூலம் வெற்றியை நிச்சயிக்கமுடியாது என்றும் எதிர்கட்சி கூட்டணி சார்பில் இரு வேட்பாளர்களை அதாவது சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரை நிறுத்துவதன் மூலம் மும்முனைப் போட்டியில் சிங்கள வாக்குகளை மூன்றாக பிரிப்பது எதிர்கட்சிக்கு சாதகமான நிலமையை தோற்றுவிக்கலாம் என்ற கருத்தும் எதிர்கட்சிக் கூட்டணிக்குள் நிலவுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வடமாகாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் 44 இலட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியிருந்தும் வாக்களிக்காமல் இருந்துள்ளனர். இந்த 44 இலட்சத்து 65ஆயிரம்; வாக்காளர்களும் ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளிலும்; நம்பிக்கை இழந்ததாலே இவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கருதலாம். இவர்களில் ஒரு பகுதியினராவது நடைபெறவிருக்கும் தேர்தலில் மூம்முனைப் போட்டி ஏற்படுமிடத்து புதிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அப்படி வாக்களி;க்கப்பட்டால் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குவீதம் அதிகரிக்கும் இதில் 50.1 வீதம் வாக்குகளை மகிந்த ராஜபக்ஷ பெறமுடியாமல் போகலாம் என்று எதிர்கட்சிகள் கருதலாம்.

எப்படி இருந்த போதிலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. பொதுசன ஐக்கிய முன்னணியின் வாக்கு வங்கியி;ல் இருந்து ஒரு பகுதியையாவது எதிர்க்கட்சி கூட்டணி எடுத்தாலன்றி மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றியை தடுக்கமுடியாது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி மகிந்தாவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தினால் தமிழ் மக்கள் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் அரசியல் சூழ்நிலை எப்படி மாறுமோ யார் கண்டார்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக