24 அக்டோபர், 2009

நலன்புரி நிலைய மக்களை மழைக்கு முன்னர் மீள்குடியேற்ற அழுத்தம் கொடுக்குமாறு தமிழக நாடாளுமன்றக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தல்-
மலேசிய தீக்கந்தனா தடுப்புமுகாம் இலங்கையர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது-

மலேசிய தீக்கந்தனா தடுப்புமுகாமில் இலங்கையர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இவர்கள் உண்ணாவிரதத்தினை கடந்த 07நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். ஐ.நாவின் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான ஆணையாளரைச் சந்திக்க தமக்கு அனுமதி வழங்கக் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளனர். மலேசிய முகாம்களிலுள்ள சுமார் 108இலங்கையர்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஆறுபேர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் குறித்த இலங்கையர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐ.நாவின் இடம்பெயர்ந்தோர்க்கான மலேசிய அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். மலேசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிக்க தான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மழைக்குமுன் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை வந்துசென்ற தமிழக நாடாளுமன்றக் குழுவினர் இந்தியப் பிரதமரை நேற்று சந்தித்தபோது இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரி.ஆர்.பாலு, தமது குழுவின் விஜயம் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்ததுடன், இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக