24 அக்டோபர், 2009

இலங்கை வந்த தமிழகக் குழு - பிரதமர் மன்மோகன் டில்லியில் சந்திப்பு


இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், போர்ப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

போர் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்றிய பிறகு தமிழர்கள் அவரவர் வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து தமிழர் முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக, மத்திய அரசின் அனுமதியுடன், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு, கடந்த 10ஆந் திகதி இலங்கை சென்றது.

அவர்கள் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டனர். அதிபர் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்பட பலரை சந்தித்துப் பேசினர்.

தமிழகம் திரும்பிய அந்த குழுவினர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து, இலங்கைத் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சென்று திரும்பிய தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு தலைமையில் டில்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வினியோகிக்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.

இலங்கைக்கு கூடுதலாக வழங்கப்பட வேண்டிய நிதி மற்றும் நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமருக்கு யோசனை தெரிவித்தனர்.

இலங்கையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். தங்கள் பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இந்தச் சந்திப்பின் விவரங்கள் குறித்து தி.மு.க. எம்.பி. கவிஞர் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

"இலங்கையில் டிசம்பர் மாதம் பருவமழை தொடங்கும். அதற்கு முன்பாக, முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டோம்.

இதனை ஏற்று இலங்கை அரசிடம் வலியுறுத்துவதாக பிரதமர் உறுதி அளித்தார். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி குறித்தும் தெரிவித்தோம். நாங்கள் கூறியவற்றை பிரதமர் பொறுமையாக கேட்டார். தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

தற்போது முதல்கட்டமாக 50 ஆயிரம் பேர் சொந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவது நிவாரண பணிகளின் முன்னோட்டம் ஆகும். தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் நடைபெறுவதாக கூறப்படுவது தவறு.

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரும் கண்காணித்து வருகிறார். விடுதலைப்புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை. "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக