27 ஏப்ரல், 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு:





ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு: இந்திய தெரிவிப்பு
ஐ.நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை கவனமாகப் ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு

ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை வலியுறுத்து

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்


திருகோணமலை சிறையிலிருந்து நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் பெற்றவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நபர் ஒருவரை பேசாலைக் கடற்; பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த இவர் கடற்படையிடமிருந்து கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்ற போதும்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. அறிக்கையை வரவேற்கும் அமெரிக்கா

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாகவும் போர்க் குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வறிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஐ.நா. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சர்வதேச விசாரணைகள் இடம் பெற இலங்கையின் ஒப்புதல் வேண்டும்.

அல்லது ஓர் பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருத்தமான சர்வதேச அரங்கம் என்று கருதப்படுவது யாது? என்பது தொடர்பில் பான் கீ மூனின் அறிக்கையில் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. இது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமைகள் அமைப்பாக இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குறித்து ஓர் விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென பான் கீ மூன் நியமித்த குழு சிபார்சு செய்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருதரப்பினரும் சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியமைக்கான குற்றஞ்சாட்டுமளவுக்கு ஆதாரமான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் 200 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் இணை நிறுவனங்கள் என்பனவும் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பவை பாரிய அளவில் இருதரப்பினாலும் மீறப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறும் ஐ.நா. அறிக்கை அவற்றுள் சில யுத்தக் குற்றங்கள், ஏனையவை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அரசாங்கமும் விடுதலை புலிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என முன்வைத்த அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை பொது மக்களின் ஆர்வம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் இலங்கை அரசும் மக்களும் தேசிய நல்லிணக்க மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலை புலிகளினாலும் மீறப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு முன்வைத்த தீர்மானங்களையும் விதந்துரைகளையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அதில் சில நம்பகத்தன்மையுடைய யுத்தக் குற்றச்சாட்டுக்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களும் அடங்கியுள்ளன.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை உட்பட நம்பகத்தன்மையுடன் கூடிய ஐந்து வகையான மீறல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதேபோன்று பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளியேற முயன்ற சிவிலியன்களை படுகொலை செய்தமை உ ட்பட ஆறு வகையான மீறல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு முதலில் உள்ளதாக நிபுணர் குழுவின் விதந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை பான் கீ மூன் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த மூவரடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த மூவரடங்கிய நிபுணர் குழுவில் இந்தோனேஷியாவை சேர்ந்த மர்சுகி தருஷ்மன், தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்து அக்கறையில்லை
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமையை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலனித்துவ முயற்சி என்று கூறலாம்.

இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரி மையும் இல்லை என்று ஸ்ரீலங்கக்ஷி சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கம் குறித்து பேசவிரும்பவில்லை. எனினும் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும மேற்கண்ட விடயங்களை கூறினார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.

அதாவது இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆனால் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஆதாரமற்ற வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும். நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.

நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தற்போதுதான் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...