18 செப்டம்பர், 2010

மட்டு.வெடிப்புச் சம்பவம்: உயிரிழந்த சீனர்களின் சடலங்கள் தாய்நாட்டுக்கு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவிக்கிறது.

இவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் சிறைத்தண்டனையை நீக்கக்கோரி மனுத்தாக்கல்



முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை சட்டவிரோதமானது எனக்கூறி ஜனநாயக தேசிய கூட்டணி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரத்பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றன. யுத்தகாலத்தில் ஆயுதக் கொள்வனவு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் பின்னரே இத்தீர்ப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இராணுவ நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாது: உபய மெதவல

கரடியனாற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். அரசியல் காரணிகளோ அல்லது ஒத்துழையாமை நடவடிக்கையோ இந்த வெடிப்பின் பின்னணியில் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கரடியனாற்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மட்டக்களப்பு, கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோத்தர் நேற்றிரவு 9.30 மணியளவில் மரணமானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த அமைச்சு தீர்மானம்

அடுத்த வருடம் முதல் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த சுகாதார போஷாக்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.

நோயாளிகளுக்கு பாமஸிகளில் இருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளின் விலைகளும் இதேபோல காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

அரசாங்கம் இலவச மருத்துவ சேவைக்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்பட வுள்ளது.

மருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுவதால் அவற்றின் பெறுமதியோ மதிப்போ நோயாளிகளுக்கு புரிவதில்லை. இதனால் சிறு குறையைக் கூட தூக்கிப் பிடிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

இது தவிர ஆஸ்பத்திரியில் இல்லாத சில மருந்துகளை வெளியில் இருந்து வாங்குமாறு மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். அத்தகைய மருந்து வகைகளின் விலைப்பட்டியல்களும் அடுத்த வருடம் முதல் காட்சிப்படுத்தப் படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

4 குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா குற்றவாளி 2வது இராணுவ நீதிமன்று தீர்ப்பு




சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்திய இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென அறிவித்துள்ளது.

இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.

மேற்படி 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தாலே தீர்ப்பு நடைமுறைப்படுத் தப்படும்
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் 50,000 வீடமைப்பு திட்டம்: முதற்கட்டம் கொத்தணி முறையில் 1000 வீடுகள்; 10,000 வீடுகள் புனரமைப்பு






வடக்கில் மீள் குடியமரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படு வதுடன் பத்தாயிரம் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வடக்கில் ஆரம்பிக்கப்படு மென்றும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டத்தில் ஆயிரம் புதிய வீடுகள் கொத்தணி முறையில் நிர்மாணிக்கப்படுவ துடன் பத்தாயிரம் வீடுகளைப் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பத்தாயிரம் வீடுகளைத் திருத்தும் பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். புதிய வீடுகளை அமைக்கும் முதற்கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐம்பது வீடுகள் வீதம் இருநூறு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படும்.

வீடு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென இந்திய நிறுவனமொன்றின் அதிகாரிகள் இலங்கை வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், இந்தத் திட்டத்திற்கான முழுமையான ஆளணி வளத்தை இலங்கை அரசு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப உதவிகளை மாவட்டச் செயலகம் வழங்கும். நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறு வனம் மேற்பார்வை செய்யும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

வீடமைப்புத் திட்டத்தை முன்னெ டுக்கவென அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய மட்டங்கள் என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

வீடுகளைப் புனரமைப்பதற்கென இரண்டு இலட்ச ரூபாயும் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஐந்து இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிர்மாணப் பணிகளுக்கான வரைவாவணங்கள் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு ஏழாயிரம் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயணாளிகள் விரும்பினால் மேலதிகமான விரிவாக்கத்தினைச் செய்துகொள்ள முடியும். வவுனியாவில் சுமார் இரண் டாயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய் யப்பட வேண்டியுள்ளது.

எனினும், தற்போது மேற்கொள்ளப் படும் ஒதுக்கீடுகளின் பிரகாரம் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப் படவுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மீளக்குடி யமரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஆடைத் தொழிற் சாலைகள் மூன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், தற்போது வைத்தியசாலை, பாடசாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், உள்ளிட்ட ‘உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அரச சார் பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாக மாவட்டத்தில் மீள்குடி யேற்றம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இதுவரை 8114 குடும்பங்களைச் சேர்ந்த 27,414 பேர் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறியிருப்பதாகக் குறிப் பிட்டார்.

வவுனியா தெற்கிலிருந்து 1990களில் இடம்பெயர்ந்த 812 குடும் பங்களைச் சேர்ந்த 1185 பேரும் சொந்த இடம் திரும்பியுள்ளனர்.

செட்டிக்குளம் மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் முல்லைத்தீவு புதுக்குடி யிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் மாத்திரமே மீளக்குடியமர காத்திருக்கிறார்கள்.

கண்ணி வெடி அகற்றும் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. எனினும், மாக மன்குளம் பகுதியில் மாத்திரம் சிறிய பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அடுத்த பெரும்போகத்தில் மேலதிகமாக பத்தாயிரம் ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கென நெற்களஞ்சியமும் உரக் களஞ் சியமும் அமைக்கப்படுகின்றன என்று தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், நிர்மாணப் பணிகளுக் கென வழங்கப்பட்ட சீமெந்து மூடைகள் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் அவ்வாறு களஞ்சியப் படுத்தப்பட்டே பயன்படுத்தப்படுகிறதென்றும் சுட்டிக்காட்டினார்.

இணையத்தளமொன்று பொய்யான செய்தியைத் திரிபுபடுத்தி வெளியிட்டு விட்டதாகவும் அரச அதிபர் விசனம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறில் கொள்கலன் வெடி விபத்து பொலிஸ் நிலையம் தரைமட்டம் வாகனங்கள் சுக்கு நூறு 25 பலி 52 காயம் இரு சீனர்களும் உயிரிழப்பு






விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

பதில் பாதுகாப்புச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது டன் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் பலியானதுடன் 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர் களில் இருவர் சீன பிரஜைகளாவர்.



காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முற்பகல் 11.35 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேரும் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதேவேளை பலத்த காயங்களுக் குள்ளானவர்களில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனரென இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கரடியனாறுப் பகுதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீன நிறுவன மொன்றுக்குச் சொந்தமான வெடிமருந்துகளை நிரப்பிய மூன்று கொள்கலன்கள் தற்செயலாக வெடித்ததிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டமாகி யுள்ளதுடன் அதனை அண்டியுள்ள கட்டடங்கள் பொலிஸ் நிலையத்திற்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 ற்கு மேற் பட்ட வாகனங்களும் முழுமையாகச் சேத மடைந்துள்ளன.

இந்த வெடிப்புச் சத்தத் தால் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியே அதிர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நிலையத்துக்கு பல்வேறு அலுவல்களுக்காக வந்திருந்த பொதுமக்களும் பொலிஸாரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் சீன நிர்மாணப் பணிகள் நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர்.

சீன நிறுவனத்துக்குச் சொந்தமான வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்கள் பாதுகாப்புக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

நேற்றுக் காலை அக்கொள்கலன்களிலிருந்து வெடிமருந்துகளை வெளியே எடுக்கும் போதே சடுதியாக இவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்படி சீன நிறுவனமானது கரடியனாறு பகுதியில் வீதிப்புனரமைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றது. கற்பாறைகளை உடைப்பதற்காக இவ் வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

நேற்றைய இச்சம்பவத்தையடுத்து கரடியனாறு பிரதேசம் பெரும் அல்லோல கல்லோலப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பெருமளவு பொலிஸாரும் இராணுவம் மற்றும் அதிரடிப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பிலிருந்து பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவொன்று கரடியனாறு சென்றதுடன் அவர்களுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் குழுவொன்றும் சென்று பகுப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்திலேயே அமைச்சர் பியசேன கமகே, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மாகாண அமைச்சர் சுபைர் மேற் கொண்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கைகளை மட்டக்களப்பு இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதவான் இராமகமலன் ஸ்தலத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டி ருந்தார்.

நேற்றைய இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

17 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் அனுமதியின் பின்னர் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை



சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அவர் குற்றவாளியாக காணப்பட்டதால் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்ப்பானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பியசேன கமகே காத்தான்குடிக்கு விஜயம்


தேசிய வைத்தியதுறை அமைச்சர் பியசேன கமகே இன்று மாலை காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அமைச்சர் மஞ்சந்தொடுவாய் அரச ஆயுள்வேத வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின் குறைபாடுகளையும் தேவைகளையும் கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம்



கரயடினாறில் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மீள்குயேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை பதுளை- செங்கலடி வீதியில் கரடியனாறு சந்தியில் உள்ள பொலிஸ் நிலையத்திலேயே வெடிப்புச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன் படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உடனடி விசாரணைக்கும் பணித்தார்.

சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...