28 ஜூன், 2011

முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்




முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசத்தில் நேற்று 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் மேலும் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்




தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.

அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன ஜனாதிபதியினால்அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாமும் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்க பெரும்பான்ø பலமும் உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அரசாங்கம் பிளவுபடும்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும். இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் அம்முயற்சி சந்திரிகா, ஜே.வி.பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை




புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:,

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை




வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவ்வாறு இறந்தவர்களில் பலருடைய சடலங்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவோ, எரிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிரியைகளின் ஊடாக எதுவுமே செய்யப்படவில்லை. என்றும் இதனால் இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பெரிதும் மனம் நொந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மன அமைதிக்கும் இறந்தவர்களின் ஆத்ம சாத்திக்காகவுமே இவ்வாறாக சிவாலயங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பூஜைகளும் நடத்துவற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள முக்கிய சிவாலயத்தில் பிரதான ஆத்மசாந்திப் பூஜைகள் நடைபெறும் அதேவேளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய சிறியதும் பெரியதுமான சிவாலயங்களிலும் இந்த பூஜைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆடி அமாவாசை ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்திற்கப்பால் செல்லவேண்டும்: டிலான்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அப்பால் செல்லவேண்டும். அதாவது 13 ஆவது திருத்தத்தை தாண்டி செல்லவேண்டும் என்பதனை நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.

அத்துடன் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி




பயங்கரவாத நடவடிக்கைகளால் நன்மையடையும் சில குழுக்களிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வது இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் 50 ஆவது வருட நிறைவு விழாவையொட்டி கொழும்பில் நடைபெற்ற சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பலநாடுகள் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் அது ஒரு கடந்த கால நிகழ்வாகும். இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

26 ஜூன், 2011

இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.

இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..

அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்

பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற வேண்டும் என மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்“ இறைமையயுள்ள ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையில் நாம் தலையிட முடியாது எனக் கோரி மலேஷிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலே அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குறித்த மகஜர் மலேஷியாவிற்கான இலங்கை தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன.

நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறான கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நலனை விட நாட்டு நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபை கலந்தாலோசித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...