26 ஜூன், 2011

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற வேண்டும் என மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்“ இறைமையயுள்ள ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையில் நாம் தலையிட முடியாது எனக் கோரி மலேஷிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலே அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குறித்த மகஜர் மலேஷியாவிற்கான இலங்கை தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக