28 ஜூன், 2011

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்




தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.

அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன ஜனாதிபதியினால்அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாமும் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்க பெரும்பான்ø பலமும் உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அரசாங்கம் பிளவுபடும்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும். இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.

எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் அம்முயற்சி சந்திரிகா, ஜே.வி.பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக