15 ஜூன், 2011

நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சிகள், அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களின் யோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே உயர் அதிகாரி மேற்கண்டவாறு கூறினார்.

ஆணைக்குழுவின் உயர் அதிகாரி இது தொடர்பில் மேலும் கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழு தற்போது சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை அரைவாசிக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆய்வு செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில் இவ்வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதாவது ஏற்கனவே மே மாதம் 15 ஆம் திகதி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது. எனினும் அதிகமான சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் ஆறு மாத கால நீடிப்பு கோரப்பட்டது.

அந்த வகையிலேயே நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களிடம் பெறப்பட்ட யோசனைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் அதிகளவிலான விசாரணை அமர்வுகளை கடந்த காலங்களில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வில் அரசாங்கத்தின் இழுத்தடிப்பானது பாரதூரமான பின்விளைவுகளையே தோற்றுவிக்கும் :ஐ.தே.க. எச்சரிக்கை





வடக்கு கிழக்கு பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள சர்வதேசம் அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. இந்தியா உட்பட உள்நாட்டு தமிழ் சிங்கள அரசியல் கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிப்புக்கள் பாரதூரமானதும், பயங்கரமானதுமான பிரச்சினைகளையே உருவாக்கப் போகின்றன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்க் கட்சிகளுடனும் இந்தியாவுடனும் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி அரசியல் தீர்வினை இழுத்தடித்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்திவிட முயற்சிக்காது அணுகுமுறைகளைக் கையாளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்தை வைத்து அரசாங்கம் இன்று அரசியல் இலாபம் தேடிக் கொண்டிருக்கின்றது. எமது நாட்டில் உள்ள பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் விடயத்தில் உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்துக்கு வேறொன்றும் அரசாங்கத்தினால் கூறப்பட்டு வருகின்றது. தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி ஐ.நா.வுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கம் உண்ணாவிரதம் இருந்தும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.

நிலைமை இவ்வாறிருக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற ராஜித்த சேனாரத்ன தனது கூட்டமொன்றில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வருகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது சாரத்தை உயர்த்திக் கொண்டு கத்துவதில் பயனில்லை என்றும் இவ்விடயத்தை மூளையைப் பாவித்து அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தனது செவ்வியொன்றில் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கூட்டி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத் தன்மையைத் தோற்றுவித்துள்ள அரசாங்கம் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றது என்று கூறியுள்ளார்.

உண்மையில் அவர் கூறியதுதான் உண்மை. இதனைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறி வருகின்றது. எந்தவொரு இலங்கையரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான சட்டம் இல்லை. அதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இங்கு தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

உண்மைத்தன்மை தெரியாது

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அங்கு உயர் மட்டத்துடன் பேச்சு நடத்தி பின்னர் கூட்டு இணக்கப்பாட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டதாக கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்தியாவிடம் இலங்கையை தாரைவார்ப்பதற்கு அல்ல, இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பையே அதில் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் உண்மைத் தன்மை என்னவென்று எவருக்கும் தெரியாது. இந்த அறிக்கை தொடர்பில் எமக்கு பாரிய கேள்வியாக இருக்கின்றது.

பேச்சுக்கள் இடம்பெறுகின்றன

தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் வடக்கின் தமிழ்க் கட்சிகளுடன் பேசி வருகின்ற அதேவேளை இந்தியாவுடனும் பேச்சு நடத்தி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்திய உயர் மட்ட தூதுக்குழுவுடன் அரசு பேச்சு நடத்தியது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருக்கின்றது.

13 பிளஸ் என்று முன்னர் கூறிய அரசாங்கம் தற்போது பொலிஸ் காணி அதிகாரம் இல்லையென்றும் இது தொடர்பில் சர்வ கட்சிக் குழுவொன்றினை அமைக்கப் போவதாகவும் கூறியிருக்கின்றது.

வீணடிக்கும் செயல்

அரசியல் தீர்வு விவகாரத்துக்காக இதற்கு முன்னரும் இவ்வாறு பல குழுக்கள் அமைத்து ஆராயப்பட்டன. இறுதியில் அவை ஒன்றுமில்லாமையாகிவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வை முன்வைக்கும் விடயத்துக்காக சர்வகட்சிக்குழு அமைக்கப்படும் திட்டமானது காலத்தை வீணடிக்கும் செயலாகும். இதில் நம்பிக்கை கொள்ள முடியாது. அவ்வாறு அமைக்கப்படுகின்ற குழு அர்த்தமுடையதாகவும் அமையாது.

அழுத்தம் அதிகரிப்பு

இதேவேளை, நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு வடக்கின் தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி உள்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்தியாவும் சர்வதேசமும் தமது அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறு இந்த பிரச்சினையை இழுத்தடித்து வருவதானது எங்கு சென்று முடியும் என்று தெரியாதுள்ளது. அரசாங்கத்தின் இந்த போக்கு உள்நாட்டையும், உலக நாடுகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகும்.

நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்

இந்தியாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புக்களையும் ஏமாற்றுக்களை மேற்கொண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது.

கடமையும் பொறுப்பும்

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் பாரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றோம். அதே போல் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்த வெற்றியை வைத்துக்கொண்டு அதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று பொசன் பெளர்ணமி தினம்: அநுராதபுரம், மிஹிந்தலையில் வைபவங்கள்: 15 இலட்சம் பக்தர்கள் வருவரென எதிர்பார்ப்பு

பொசன் பெளர்ணமி தினம் இன்றாகும். இதனையிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 15 இலட்சம் பக்தர்கள் இன்று அநுராதபுரத்திற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சுகாதார, குடிநீர், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய இரு குளங்களிலும் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது. எனினும் பசவக்குளம், கும்பிச்சான்குளம், கனதராவ ஆகிய குளங்களில் நீராட முடியும்.

மேற்குறிப்பிட்ட குளங்களில் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இப் பகுதியில் அவசர உயிர்காப்பு பிரிவினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், நகர், மிஹிந்தலை, அநுராதபுரம் புனித நகர் பகுதிகள் உட்பட போக்குவரத்து பாதுகாப்புக்கென சுமார் 4000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தம்புள்ள வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும், புத்தளம் வீதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவதற்குமாக வெவ்வேறு வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திஸாவெவ, நுவரவெவ ஆகிய குளங்களிலிருந்து குடிப்பதற்காக நீர் எடுப்பதால் நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நகர சபையினர் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகருக்குள் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவு விவகாரம்: விசாரணை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் விரைவு

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்பட்டதாக கூறப்படும் விடயத்தை விசாரணை செய்ய ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரையும் அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

ஜோர்தானிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் கடமை புரியும் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வருவதாக ‘உலக தொழிலாளர்கள் மனித உரிமைகள் நிறுவகம்’ சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த யுவதிகளை அந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையிலுள்ள இலங்கை அதிகாரி ஒருவரே இவ்வாறு பாலியல் வல்லுறவை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது இது நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற போது இவ்வாறான முறைப்பாடுகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை.

சில வேளைகளில் உணவு தரமானதாக இல்லை. மற்றும் கொடுப்பனவுகள் தாமதமாகிறது போன்ற முறைப்பாடுகளையே செய்தனர்.

யுவதிகள் தங்களது பிரச்சினைகளை ஆண்களிடம் சொல்வதற்கு சில வேளைகளில் தயங்குவதுண்டு. இதனைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரை அனுப்புவது என முடிவு செய்தோம்.

அத்துடன் ஜனாதிபதி புலனாய்வு பிரிவிலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் விசாரணைக்காக அனுப்பவும் முடிவு செய்தோம்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனத்திடமும் நாம் ஆதாரங்களை கேட்டிருக்கிறோம். அவர்கள் மீண்டும் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு செல்கின்றனர். அவர்களுடனேயே எமது குழுவினரும் செல்லவுள்ளனர். என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

14 ஜூன், 2011

கருங்கடலில் போர் ஒத்திகை: அமெரிக்க போர்க் கப்பலுக்கு ரஷியா கடும் எதிர்ப்

சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு உக்ரைனின் அயல் நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என “நேட்டோ' நாடுகளை வலியுறுத்தியது.

ரஷியாவின் இந்த கோரிக்கையை ஏற்க “நேட்டோ' நாடுகள் மறுத்து விட்டன. இதை தொடர்ந்து அமெரிக்கா போர்க்கப்பல் கருங்கடலுக்குள் நிலைநிறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கப்பல் போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டும்" தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா



தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் திட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமையன்றுதான் இத் திட்டம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. துவக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அதிமுக எம் எல் ஏ வும் கலந்து கொள்ளவில்லை.

தூத்துக் குடியிலிருந்து திங்கள் மாலை புறப்பட்ட கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு சென்றடைந்துள்ளது.

அதேபோல இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.

ப சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்

மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முறை கேடாக ஜெயித்தார் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தற்போது டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

"சிதம்பரம் தேர்தலில் ஜெயிக்கவில்லை. உண்மையில் தேர்தலில் ஜெயித்தது எங்கள் கட்சி வேட்பாளர்தான். சிதம்பரம் தற்போது நாட்டை ஏமாற்றுகிறார்". என்றார் முதல்வர் ஜெயலலிதா.

தேர்தல் முடிவுகள் குறித்த விபரங்களை கணினியில் பதிவு செய்யும் நபர் செய்த மோசடியால் சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா கூறினார். இது தொடர்பான ஒரு வழக்கு ஏற்கனவே அதிமுக சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதே போல 2ஜி வழக்கில் தற்போது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால், அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக பிரதமர் மன் மோகன் சிங் அவர்களைச் சந்தித்த ஜெயலலிதா, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி உறவு பேணும் நிலையில் தாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது முறையாக இருக்காது என்றும் முதல்வர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

21.வது தியாகிகள் தினம் ஜெர்மனியில்

அழிந்து போன மிருகங்களால்?(புலிகளால்) கொலை செய்யப்பட்ட மா மனிதர்களில் ஒருவர்
தோழர் திரு.பத்மநாபா
மேலும் இங்கே தொடர்க...

11 ஜூன், 2011

அரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை




இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்,

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.

இலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.

மேலும் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.

இதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.

இதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின் தமிழ்க் குரல்


கனேடிய பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில்,

"கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்.

தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.

இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...