15 ஜூன், 2011

நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சிகள், அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களின் யோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே உயர் அதிகாரி மேற்கண்டவாறு கூறினார்.

ஆணைக்குழுவின் உயர் அதிகாரி இது தொடர்பில் மேலும் கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழு தற்போது சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை அரைவாசிக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆய்வு செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில் இவ்வருடம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதாவது ஏற்கனவே மே மாதம் 15 ஆம் திகதி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது. எனினும் அதிகமான சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் ஆறு மாத கால நீடிப்பு கோரப்பட்டது.

அந்த வகையிலேயே நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் அவதானிப்புக்கள் மற்றும் நிபுணர்களிடம் பெறப்பட்ட யோசனைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் அதிகளவிலான விசாரணை அமர்வுகளை கடந்த காலங்களில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக