15 ஜூன், 2011

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவு விவகாரம்: விசாரணை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் விரைவு

ஜோர்தானில் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்பட்டதாக கூறப்படும் விடயத்தை விசாரணை செய்ய ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரையும் அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

ஜோர்தானிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் கடமை புரியும் இலங்கை யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வருவதாக ‘உலக தொழிலாளர்கள் மனித உரிமைகள் நிறுவகம்’ சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த யுவதிகளை அந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையிலுள்ள இலங்கை அதிகாரி ஒருவரே இவ்வாறு பாலியல் வல்லுறவை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது இது நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற போது இவ்வாறான முறைப்பாடுகள் எதனையும் அவர்கள் செய்யவில்லை.

சில வேளைகளில் உணவு தரமானதாக இல்லை. மற்றும் கொடுப்பனவுகள் தாமதமாகிறது போன்ற முறைப்பாடுகளையே செய்தனர்.

யுவதிகள் தங்களது பிரச்சினைகளை ஆண்களிடம் சொல்வதற்கு சில வேளைகளில் தயங்குவதுண்டு. இதனைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவரை அனுப்புவது என முடிவு செய்தோம்.

அத்துடன் ஜனாதிபதி புலனாய்வு பிரிவிலுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரையும் விசாரணைக்காக அனுப்பவும் முடிவு செய்தோம்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அரச சார்பற்ற நிறுவனத்திடமும் நாம் ஆதாரங்களை கேட்டிருக்கிறோம். அவர்கள் மீண்டும் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு செல்கின்றனர். அவர்களுடனேயே எமது குழுவினரும் செல்லவுள்ளனர். என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக