11 ஜூன், 2011

இந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்,

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.

இலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.

மேலும் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.

இதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.

இதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக