15 அக்டோபர், 2009

தமிழர் இறந்தால் என்ன? இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ? : விஜயகாந்த் கேள்வி



காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த சில மணிநேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

"தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் அங்குள்ள தமிழர்களுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.

இந்தப் பயணம் ராஜபக்ஷவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமக்குத் தாமே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷ இதை பயன்படுத்திக் கொள்வார்.

மாணவர்கள் கேள்வி

"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டமைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் பழிவாங்கப்பட்டு விட்டனர்.

இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்" என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும் என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.

"எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும்" என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது அதை அன்று சீரழித்தவர் இதே கருணாநிதிதான்.

பிரித்தாளும் சூழ்ச்சி

இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.

நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால் இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு?

பேராபத்தில் தமிழர்கள் இருந்தபோது, இந்திய அரசு, மௌனம் சாதிப்பது யாருக்காக? இந்த அரசு எவருக்காக செயற்படுகிறது என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியா இன்றேல், வேறு எங்காவது அனுப்புங்கள் : 9 வயது இலங்கை சிறுமி கோரிக்கை

உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.

சிறுமி பிருந்தா,

" உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

ஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது" என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.

மிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்பட்டு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் முறையாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

தற்போது இந்தத் தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 1650 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
தீபாவளிக்குப் பிறகு கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து அறிவிப்பு : எஸ்.சதாசிவம்
"கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவது குறித்துத் தீபாவளி பண்டிகைக்குப்பிறகு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது :

"தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளரின் அடிப்படை நாட்சம்பளம் 285 ரூபாவாகவும், ஒரு நாள் வேலையின் இலக்குக்கான கொடுப்பனவாக 30 ரூபாவாகவும், தோட்ட நிர்வாகம் வேலை வழங்கும் நாட்களில் 75 வீத வருகைக்காக 90 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பளக் கொடுப்பனவை அனைத்துத் தொழிலாளர்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 405 ரூபா சம்பளத்தினை தீர்மானிப்பதில், தோட்ட நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை வலுவாகக் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக தொழிலுறவு ஆணையாளருக்கு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. சாதகமன பதிலே கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான மலையக தொழிற்சங்க அமைப்புக்களை ஒன்று திரட்டி மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்கள் குறித்துத் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.

தீபாவளி பண்டிகைக்குப்பிறகு இந்தப்போராட்டம் குறித்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர்-கருணாநிதி


வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்தியக் குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். இலங்கை ஜனாதிபதியின் கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம்.இதன் அடிப்படையில் 10ஆம் திகதி இந்தியக் குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியக் குழு வலியுறுத்தியது.

அதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது" என கருணாநிதி
மேலும் இங்கே தொடர்க...

14 அக்டோபர், 2009

நாட்டிற்கு நான் என்ன செய்தேன் என்பதே முக்கியம்-பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர


நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விட நான் நாட்டிற்காக என்ன செய்தேன் என்று ஒவ்வொறுவரும் சிந்திக்க வேண்டுமென்று மத்திய பிராந்தியப் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

அண்மையில் கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை வழிகாட்டிகளுக்காகன மூன்று நாள் வதிவிடச் செயல் அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது-

"சுற்றுலாத் துறை வழிகாட்டிகளுக்கான இச்செயலமர்வின் முக்கியத்துவத்தை நான் நான்கு அடிப்படைகளில் நோக்குகின்றேன்.முதலாவதாக இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.அடுத்ததாக தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இது அவசியமாகிறது.அடுத்தபடியாக மனிதாபிகானத்தேவையின் அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.இதைவிட இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் இது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

தன்மானமுள்ள தேசிய இனம் என்ற அடிப்படையில் இன்று நாம் சர்வதேச சமூகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.யுத்தம் நீங்கி அமைதி ஏற்பட்ட சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எம்மை உன்னிப்பாக அவதானிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.இந்நிலையில் எமது தொழிற்பாடுகள் முக்கியமானதாகும். எனவே நாம் எமது உள்ளத்திற்கும் மன சாட்சிக்கும் பொருத்தமான முறையில் தியாக சிந்தையுடன் நடந்துகொள்ள வேண்டும்.இதற்கு மனப்பாங்கு மாற்றம் தேவை.

எம்மிடம் எத்தகைய வளம் இருந்தாலும் எவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் தலைமைத்துவத்தில் மனிதாபிமான மனப்பாங்கு மாற்றம் இல்லாதவிடத்து எம்மால் முன்னேற முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையர்கள் சிறந்த ஒரு தேசிய இனம் என மற்ற நாடுகள் கணிப்பிடும் நிலை ஏற்படப்போகிறது.இந்த இடத்தில் நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்பதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.

சுற்றுலாத்துறை ஒரு சாதாரண தொழில் அன்று.இது ஆளுமைப் பண்புகள்கொண்ட தொழிற்றகைமைசார் உயர் பணியாகும்.ஏனெனில் இது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதுடன் நம் நாட்டைப் பற்றி பிறர் அறிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

சுற்றுலா வழிகாட்டிகளின் நடத்தை மூலம் சர்வதேசத்திற்கு தகவல்கள் சென்றடைகின்றன. எனவே வழிகாட்டிகளிடத்தில் விஷேட ஆளுமைப்பண்புகள் இருக்கவேண்டும். நடை உடை பாவனை பேச்சு உற்பட பலதுறைகளிலும் இது காணப்படவேண்டும்.

சுற்றுலா வழிகாட்டிகள் தமக்கு பல்வேறு நாட்டு மொழி பற்றிய அறிவு இருந்தால் அது போதுமானது என நினைக்கின்றனர்.இது போதாது.நம் நாட்டைப் பற்றிய பின்னணிகள்,எமது கலாச்சாரம், பண்பாடு,வரலாறு, சமயப்பின்னணிகள் புவியியல், சுற்றாடல், அழகியல் உணர்வு,புரிந்துணர்வு,மனிதாபிமானம் ஒழுக்கம் போன்ற பல விடயங்கள் தேவைப்படுகின்றது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டது



வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 06 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரில் 17 பேரும் இன்று விடுவிக்கப்பட்டு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரும் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த127 குடும்பங்ளைக் கொண்ட 367 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக்குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய முகாம் கடந்த வாரம் மூடப்பட்டு விட்டது.

இருப்பினும் சிங்கள மகாவித்தியாலய இடைத் தங்கல் முகாமில் தொடர்ந்தும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .குறித்த முகாமும் இன்றுடன் மூடப்பட்டு விட்டது.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய தூதுக் குழு- எதிர்க் கட்சி இன்று சந்திப்பு



இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல , இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் நிலவரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் விளக்கிக் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம்சிங்க தெரிவித்தார். அத்துடன் வவுனியாவில் இடம்பெயர்ந்த்வர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிற்கு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக மனோகணேசன் எம்.பி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
கிழ. மாகாண முதலமைச்சர் இந்திய எம்.பிக்கள் குழுவுடன் சந்திப்பு


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வான உறுதியான அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் மாகாண சபை முறைமையை பலப்படுத்துவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பு இந்திய இல்லத்தில் சந்தித்தபோதே இந்த தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக்குழுவினரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்தும் முதலமைச்சரினால் தெழிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்தும் விளக்கினர்,

இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சில வேலைத்திட்டங்கள் குறித்தும் தனது நன்றியினை முதலமைச்சர் தெரிவித்துக்கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

13 அக்டோபர், 2009

இலங்கைக்கு எம்பிக்கள் குழு, தமிழர்களை ஏமாற்றும் முயற்சி: ஜெயலலிதா

http://www.tamilnet.com/img/publish/2006/03/VaikoJeya_51532_front.jpg
இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை அனுப்பியது தமிழர்களை ஏமாற்றும் முயற்சி என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கைக்குச் சென்றுள்ள நாடாளுமன்றக்குழு அனைத்துக் கட்சிக் குழு அல்ல என்பதால்தான் அதில் சேர்ந்துகொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை என்பதை முரசொலி கேள்வி-பதில் அறிக்கை மூலம் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தக் குழு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு என்று நினைத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏமாந்து இருக்கிறார்.இலங்கை சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ள முடியும். இலங்கை அரசின் அடக்குமுறை எந்த தமிழர் பகுதியில் மிகக் குறைவாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறதோ, அங்கு தான் இந்தக் குழுவினர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.ராஜபக்ஷேவின் சிங்களப் பெரும்பான்மை அரசால் தேர்வு செய்யப்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் கலந்துரையாட முடியும். இலங்கை அரசின் பாதுகாப்பிற்குட்பட்ட ஏதாவது ஒரு முகாமில் உள்ள, அரசால் அச்சுறுத்தப்பட்ட சில தமிழர்களை இந்தக் குழுவினர் பேட்டி காண ஏற்பாடு செய்யப்படும். இந்தக் குழு திரும்பி வந்தவுடன் கருணாநிதியிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். இலங்கை அரசு கிட்டத்தட்ட நான்கு லட்சம் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அணிக்கும் பணியை மனப்பூர்வமாக செய்ய முயற்சித்து வருவதாக இந்தக் குழு தெரிவிக்கும். சில குறைபாடுகள் இருக்கின்றன என்றும், மிகப் பெரிய பிரச்சினையை கையாளும் போது இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும் இந்தக் குழுவினர் ஒப்புக் கொள்வார்கள். தன்னால் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்வதாக ராஜபக்ஷே உறுதி அளித்ததாகவும், கருணாநிதியின் நிர்வாகத் திறமையையும், தொலைநோக்குப் பார்வையையும் ராஜபக்ஷே புகழ்ந்ததாகவும் தெரிவிப்பார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்தத் தமிழினத்தை ஏமாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், தமிழர்களின் ஐம்பது ஆண்டு கால சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? ‘சிங்களர்கள் மட்டும் என்ற கொள்கை மற்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட கேடு விளைவிக்கக் கூடிய முறையான தரப்படுத்துதல் ஆகியவை என்னவாகும்? இதனை வருங்கால தலைமுறையினரும்மன்னிக்க மாட்டார்கள், தமிழர் உரிமைக்காக தங்கள் உயிரை ஈந்தவர்களின் ஆன்மாக்களும் மன்னிக்காது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஒரே நேரத்தில் 18 நாடுகளில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை


இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் நாளை ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்.

எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது, எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் ஒத்திகைகள் இடம்பெற உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய தேசிய இணைப்பாளர் கீர்த்தி ஏக்கநாயக்க தெரிவித்தார்
இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்வு

மட்டு. மாவட்ட முகாமிலிருந்த 4 குடும்பங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்வு



இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு இடைத்தங்கல் முகாமில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்த 10 குடும்பங்களில் நேற்று மாலை 4 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் கொக்கொட்டிச்சோலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று குடும்பங்களும், செங்கலடிப் பிரதேசததைச் சேர்ந்த ஒரு குடும்பமும் என 4 குடும்ப உறுப்பினர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்களைச் சிவில் அதிகாரிகள் பொறுப்பேற்று சொந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்று, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 127 குடும்பங்ளைக் கொண்ட 367 பேர் விடுவிக்கப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக்குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
உடனடியான மீள்குடியேற்றத்தை தவிர அகதிகள் வேறு எதனையும்



கோரவில்லை: காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன்
வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப ஓரளவு நெருக்கமாக அமைந்துள்ளன. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாழ்கின்றவர்கள் தங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்களே தவிர, வேறெதனையும் கேட்கவில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான தமிழர்கள், பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பதாக பல்வேறு தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டன. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்பதனை நேரடியாக கண்டறிவதற்கே வருகைதந்தோம் என்றும் அவர் சொன்னார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.

கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?

பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.
வடக்கிலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் : ஜனாதிபதி உறுதி



மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள்.

கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எமது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது.

அவர்களை பாதுகாப்பது எம் பொறுப்பு மட்டுமல்ல; கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காகப் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் நூல் நிலையமானது தெற்காசியவிலேயே சிறந்ததெனப் பெயர் பெற்றது.

மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர்.

யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.

இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக வாழ முடியும்.

யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம்.

வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனநாயகம் மீளவும் நிலைநாட்டப்பட வேண்டும். இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.

நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளோம். எமது தமிழ் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்துள்ளோம்.

யாழ்.தேவி மீண்டும் தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்திகளை தொடர்ச்சி யாக முன்னெடுக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன.

கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்" என மேலும் தெரிவித்தார்
இலங்கை விஜயம் தொடர்பில் பாலு,கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை.

தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் ""நோ கொமன்ட்ஸ்'' என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில்,

முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் முகாம்களிலுள்ள மக்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன? அதனை இந்தக் குழு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோது, முகாம்களை அவதானித்தோம். நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையிட்டு தமிழக அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என்றார். மேலும் அவரிடம் விபரம் அறிய முயன்றபோது, மேலதிக விபரங்களை தொலைபேசியூடாக தெரிவிப்பதாக கூறி அதன் இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு நழுவினார்
மேலும் இங்கே தொடர்க...
இதை பார்க்கும்போது விஸ்ணு சக்கரம்போல் தோன்றுகிறதா?
மொஸ்கோ நகருக்கு மேலாக மர்மமான பிரகாச வளையம்




மொஸ்கோ நகருக்கு
மேலாக பிரகாசமான முகில் வளையம் காணப்பட்டதையடுத்து, உள்ளூர்வாசிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரகாசமான வளையமானது வேற்றுக்கிரகவாசிகளின் விண் ஓடம் போன்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1996 ஆம் ஆண்டில் வசூலில் சாதனை படைத்த ஹொலிவூட் திரைப்படத்தில் வேற்றுக் கிரகவாசிகள் பூமியைத் தாக்கும் போது வானில் தோன்றிய பிரகாசமான வளைய அமைப்பை ஒத்ததாக இந்த முகில் வளையம் காணப்பட்டதாக கூறப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...