15 அக்டோபர், 2009

அவுஸ்திரேலியா இன்றேல், வேறு எங்காவது அனுப்புங்கள் : 9 வயது இலங்கை சிறுமி கோரிக்கை

உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.

சிறுமி பிருந்தா,

" உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

ஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது" என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.

மிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்பட்டு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் முறையாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

தற்போது இந்தத் தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 1650 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக