15 அக்டோபர், 2009

தீபாவளிக்குப் பிறகு கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து அறிவிப்பு : எஸ்.சதாசிவம்
"கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவது குறித்துத் தீபாவளி பண்டிகைக்குப்பிறகு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது :

"தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளரின் அடிப்படை நாட்சம்பளம் 285 ரூபாவாகவும், ஒரு நாள் வேலையின் இலக்குக்கான கொடுப்பனவாக 30 ரூபாவாகவும், தோட்ட நிர்வாகம் வேலை வழங்கும் நாட்களில் 75 வீத வருகைக்காக 90 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பளக் கொடுப்பனவை அனைத்துத் தொழிலாளர்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 405 ரூபா சம்பளத்தினை தீர்மானிப்பதில், தோட்ட நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை வலுவாகக் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக தொழிலுறவு ஆணையாளருக்கு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. சாதகமன பதிலே கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான மலையக தொழிற்சங்க அமைப்புக்களை ஒன்று திரட்டி மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்கள் குறித்துத் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.

தீபாவளி பண்டிகைக்குப்பிறகு இந்தப்போராட்டம் குறித்து தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக