14 அக்டோபர், 2009

நாட்டிற்கு நான் என்ன செய்தேன் என்பதே முக்கியம்-பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர


நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விட நான் நாட்டிற்காக என்ன செய்தேன் என்று ஒவ்வொறுவரும் சிந்திக்க வேண்டுமென்று மத்திய பிராந்தியப் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

அண்மையில் கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை வழிகாட்டிகளுக்காகன மூன்று நாள் வதிவிடச் செயல் அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது-

"சுற்றுலாத் துறை வழிகாட்டிகளுக்கான இச்செயலமர்வின் முக்கியத்துவத்தை நான் நான்கு அடிப்படைகளில் நோக்குகின்றேன்.முதலாவதாக இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.அடுத்ததாக தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இது அவசியமாகிறது.அடுத்தபடியாக மனிதாபிகானத்தேவையின் அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.இதைவிட இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் இது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

தன்மானமுள்ள தேசிய இனம் என்ற அடிப்படையில் இன்று நாம் சர்வதேச சமூகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.யுத்தம் நீங்கி அமைதி ஏற்பட்ட சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எம்மை உன்னிப்பாக அவதானிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.இந்நிலையில் எமது தொழிற்பாடுகள் முக்கியமானதாகும். எனவே நாம் எமது உள்ளத்திற்கும் மன சாட்சிக்கும் பொருத்தமான முறையில் தியாக சிந்தையுடன் நடந்துகொள்ள வேண்டும்.இதற்கு மனப்பாங்கு மாற்றம் தேவை.

எம்மிடம் எத்தகைய வளம் இருந்தாலும் எவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் தலைமைத்துவத்தில் மனிதாபிமான மனப்பாங்கு மாற்றம் இல்லாதவிடத்து எம்மால் முன்னேற முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையர்கள் சிறந்த ஒரு தேசிய இனம் என மற்ற நாடுகள் கணிப்பிடும் நிலை ஏற்படப்போகிறது.இந்த இடத்தில் நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்பதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.

சுற்றுலாத்துறை ஒரு சாதாரண தொழில் அன்று.இது ஆளுமைப் பண்புகள்கொண்ட தொழிற்றகைமைசார் உயர் பணியாகும்.ஏனெனில் இது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதுடன் நம் நாட்டைப் பற்றி பிறர் அறிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

சுற்றுலா வழிகாட்டிகளின் நடத்தை மூலம் சர்வதேசத்திற்கு தகவல்கள் சென்றடைகின்றன. எனவே வழிகாட்டிகளிடத்தில் விஷேட ஆளுமைப்பண்புகள் இருக்கவேண்டும். நடை உடை பாவனை பேச்சு உற்பட பலதுறைகளிலும் இது காணப்படவேண்டும்.

சுற்றுலா வழிகாட்டிகள் தமக்கு பல்வேறு நாட்டு மொழி பற்றிய அறிவு இருந்தால் அது போதுமானது என நினைக்கின்றனர்.இது போதாது.நம் நாட்டைப் பற்றிய பின்னணிகள்,எமது கலாச்சாரம், பண்பாடு,வரலாறு, சமயப்பின்னணிகள் புவியியல், சுற்றாடல், அழகியல் உணர்வு,புரிந்துணர்வு,மனிதாபிமானம் ஒழுக்கம் போன்ற பல விடயங்கள் தேவைப்படுகின்றது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக