15 அக்டோபர், 2009

முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர்-கருணாநிதி


வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்தியக் குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். இலங்கை ஜனாதிபதியின் கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம்.இதன் அடிப்படையில் 10ஆம் திகதி இந்தியக் குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியக் குழு வலியுறுத்தியது.

அதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது" என கருணாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக