21 ஜூன், 2011

கூட்டமைப்பின் மீதான தாக்குதலுக்கு இந்திய வம்சாவளி மக்கள் கண்டனம்


யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் ஆயுததாரிகளால் குழப்பியடிக்கப்பட்டு கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதியான சூழல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் இடம்பெற்றுள்ள வேண்டத்தகாத கசப்பான, இவ்வாறான சம்பவம் அமைதி நிலையை சீர்குலைக்க வழிவகுத்துவிடும். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அரசியல் நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

அதேநேரம் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்காவிட்டால் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர வழிவகுத்து விடும். எந்தவொரு அரசியல்கட்சியும் தமது ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உரிமை உள்ளது. எனவே, ஜனநாயக செயற்பாடுகளை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

எனவே, இச்சம்வம் தொடர்பில் நீதியான நேர்மையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று அரச உயர்மட்டத்தினரை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக