16 ஜூன், 2011

ஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும்: அலென்சாண்டர்

ஐ.நா. அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் அரசாங்கப் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க் குற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது என்று அறிக்கையில் விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அதேவேளை, அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கை ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும்.

உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து போர்க் குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக