16 ஜூன், 2011

எயிட்ஸ் பேராபத்தை எதிர்நோக்கும் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் கனடா பல்கலைக்கழகத்துடன் நடத்திய ஆய்வில் தகவல் இலங்கையில் எயிட்ஸ் அபாயம்







இலங்கையில் எச். ஐ. வி/ எயிட்ஸ் நோயின் பேராபத்துக்கு முகம் கொடுத்தவர்களாக ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் உயிர் வாழுகின்றார்கள் என மதிப்பிடப்பட்டிருப்ப தாக சுகாதார அமைச்சின் கீழுள்ள எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் நிமல் எதிரிசிங்க தெரிவித்தார்.

எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப் பாட்டுக்கான தேசிய வேலைத் திட்டம் கனடா மெனிட்டோபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருப் பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் வியாபார நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் 40 ஆயிரம் பேரும், தன்னினச் சேர்க்கையாளர் 33 ஆயிரம் பேரும், ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் 40 ஆயிரம் பேரும் இருப்பது இந்த ஆய்வின் மூலம் இனங்காணப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாலியல் மற்றும் இனவிருத்தி ஆரோக்கியம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கவனம் என்ற தொனிப்பொருளில் இலங்கை குடும்பத் திட்டம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில் :-

எச். ஐ. வி/ எயிட்ஸ் பரவுதல் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கி வருகின்றது. என்றாலும், இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேண முடியுமா? என்ற ஐயம் இப்போது மேலெழுந்திருக்கின்றது. இந்நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் 1987 ஆம் ஆண்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டார். அன்று முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையும் 1350 பேர் இத் தொற்றுக்குள்ளானவர்களாக எமது சிகிச்சை நிலையங்களில் பதிவாகியுள்ளனர். இவர்களில் 221 பேர் எயிட்ஸாகி உயிரிழந்து உள்ளனர். 313 பேர் எயிட்ஸணுடன் உயிர் வாழுகின்றனர். என்றாலும், இந்நாட்டில் மூவாயிரம் பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளானவர்களாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், கனடாவின் மெனிட்டோபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாம் நடாத்திய ஆய்வில், இந்நாட்டில் வியாபார நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 40 ஆயிரம் பெண்களும், தன்னின சேர்க்கையில் ஈடுபடும் 33 ஆயிரம் பேரும், ஹெரொய்ன் போதைப் பொருள் பாவனையாளர்கள் 40 ஆயிரம் பேரும் இருப்பது என்பது ஆரோக்கியமானதல்ல. அதிலும் பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் குறைந்தது நான்கைந்து ஆண்கள் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலமை குறித்து உடனடியாக விசேட கவனம் செலுத்துவது மிக அவசியம்.

ஆண் பெண் தவறான பாலியல் தொடர்பு, தன்னினச் சேர்க்கை, போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்றனவே எச். ஐ. வி. பரவுவதற்கான பிரதான வழிகளாக விளங்குகின்றன. அதனால் எச். ஐ. வி/ எயிட்ஸின் பேராபத்திலிருந்து இலங்கையரைப் பாதுகாக்க விசேட கவனம் செலுத்துவது மிக முக்கியமான பணி என்றார்.

சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ஒகஸ் தலைமையிலான இச் செயலமர்வில் மகப் பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் லக்ஷ்மன் சேனநாயக்கா, டாக்டார்கள் ஹரிச்சந்திர யஹந்தாவல, லொசான் முனசிங்க ஆகியோரும் உரையாற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக