7 மே, 2011

தனியார் ஓய்வூதிய சட்டமூலத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்

அரசியலமைப்பிற்கு முரண்படாவிட்டாலும் அரசாங்கம் முன் வைத்துள்ள தனியார் ஒய்வூதிய சட்ட மூலம் ஊழியர்களுக்கு முரணானதாகவே அமைகின்றது.

எனவே இந்த சட்ட மூலத்தை எதிர்த்து அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதியம் மீது குறிவைத்து அரசாங்கம் காய் நகர்த்தி வருகின்றது. இதனால் ஒட்டு மொத்த ஊழியர்களின் சாபமும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது விழுந்துள்ளது என்றும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறுகையில்:

தற்போதைய அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தினரை மிகவும் மோசமாக கண்டித்து வருகின்றது. பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழியர் உரிமைகளை சிதைத்து வருகின்றது. 2500 ரூபா சம்பள உயர்வு முதல் இன்னோரன்ன வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊழியர்களுக்கு வழங்கினார். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

தற்போது அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வையோ நிவாரணத்தையோ வழங்காது ஊழியர் நம்பிக்கை நிதியத்தினை சூறையாடும் நோக்கில் சட்ட மூலத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது.

இச் சட்ட மூலத்தில் சேம இலாப நிதிக்கோ ஊழிய நம்பிக்கை நிதியத்திற்கோ எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. தனியார் ஒய்வூதிய சட்ட மூலத்தில் ஊழியர் நிதிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்காதவாறே சரத்துக்கள் காணப்படுகின்றன.

எனவே இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஊழியர் நம்பிக்கை நிதியங்களை மோசடி செய்ய அரசிற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தில் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த விடாது போராட்டங்களை முன்னெடுப்போம்.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஊழியர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் பாரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக