7 மே, 2011

அரசாங்கம் இனியாவது தவறுகளை ஏற்க வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் இனிமேலாவது செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு கவலையை வெளியிடுவதோடு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயாராக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐ.நா. வின் பிழையான அறிக்கைகளுக்கு பதிலாக தெளிவான பதிலை அரசா ங்கம் வழங்கி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம். பி மேலும் கருத்து தெரிவிக்கையில் ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுவோமென அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் ஐ. நா.வுடன் சுமுகமான ஒத்துழைப்பை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக முரண்பாடுகளுடன் விமர்சனங்களையே முன்னெடுக்கின்றது.

மேற்குலக நாடுகளுடனும் மோதல்களையே முன்னெடுக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.

நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் விதத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். ஐநா வின் பிழையான அறிக்கைக்கு உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி அரசாங்கம் பதிலறிக்கையை கையளிக்க வேண்டும்.

இதன் மூலமே நாட்டுக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்க முடியும். அன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இன வன்முறைகளை ஆராய நியமிக்கப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் வெள்ளையர்கள் கலந்து கொண்டு தாம் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டனர்.

அதே போன்று அரசாங்கம் இனிமேலாவது செய்த தவறுகளுக்காக கவலையை வெளியிட வேண்டும். யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்ற வேண்டும். காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்.

அத்தொடு தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். இதன் போது தான் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும்.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே 1989 களில் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று வழிகாட்டினார். இன்று நாட்டுக்குள் ஜனநாயகம் நீதி, நியாயம் கிடைக்காததால் ஜனாதிபதி அன்று காட்டிய வழியை நாம் கடைப்பிடிக்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக