19 பிப்ரவரி, 2011

உணவுப் பொருட்களின் விலை உயர்வு: கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை ஜனாதிபதி




மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தத்தின் தாக்கம் மற்றும் உலக சந்தையின் நிலைமை என்பன காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்வுகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துவருகிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் அபேட்சகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிராமத்தை மேம்படுத்தவும், கிராம மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றிய விசேட யுகமாக தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலம் வரலாற்றில் பதியும் என்பதில் ஐயமில்லை.

கிராமத்தை மேம்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசின் வேலைத் திட்டத்திற்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல் பாரிய சக்தியாக அமையும் என நம்புகின்றேன்.

தனிநபர், குடும்பம், கிராமம், நாடு என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் வேலைத் திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்புக்களை உரிய முறையில் இனங்கண்டு அதற்கேற்ப சகலரும் செயற்பட வேண்டும். அதேநேரம் தனிப்பட்ட தேவைகளுக்கு அப்பால் கட்சியின் வெற்றிக்காகப் பொது நோக்கோடு சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதும் அவசியம்.

இன்று கிராமங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. நாட்டுக்கு சிறந்த வீதி கட்டமைப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. 2012ம் ஆண்டாகும் போது நாட்டிலுள்ள சகல கிராமங்களும் மின் வசதியைப் பெற்றுக்கொள்ளும். அத்தோடு சகலருக்கும் இருப்பிடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான பாரிய வீடமைப்பு வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை எல்லா வீடுகளுக்கும் பொருளாதார அலகுகள் என்ற திட்டத்தின் கீழ் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்து தாயகத்தைக் கட்டியெழுப்பவென அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என்றார்.

இக்கூட்டத்தல் பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக