19 பிப்ரவரி, 2011

அக்மீமன, மொனறாகலை, அக்குரஸ்ஸ: உள்ளூராட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை






அக்மீமன, மொனறாகலை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச சபைகளுக்கு மார்ச் மாதம் 17ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு நேற்று இடைக்கால தடை உத்தரவை விதித்தது.

அக்மீமன மற்றும் மொனறாகலை பிரதேச சபைகளுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவொன்றும் சமர்ப்பித்த வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கு ஏற்றவகையிலேயே இந்த இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் சத்யா ஹெட்டிகே, நீதிபதி உபாலி அபேரட்ன ஆகியோரால் இந்த இடைக் காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அக்மீமன, மொனறாகலை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச சபைகளுக்கு ஐ. ம. சு. மு. வும் சுயேச்சைக் குழுவொன்றும் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்ட மைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதிகள் இத்தடை உத்தரவை வழங்கினர்.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு மனு மீதான விசாரணை நிறைவுறும் வரையில் இத்தடை உத்தரவு அமுலில் இருக்கும்.

அக்மீமன மற்றும் மொனறாகலை பிரதேச சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சமர்ப்பித்த வேட்பு மனுக்களை நிராகரித்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த்தும், அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு சுயேச்சை குழு சமர்ப்பித்த வேட்பு மனுவை நிராகரித்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி யு. கமகேயும் இந்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக