7 பிப்ரவரி, 2011

பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை: 4 மாவட்டங்களில் அபாயம்; 24 மணிநேர முன்னெச்சரிக்கை

பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடுத்தது.

இந்த நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்க ளாக ஏற்கனவே அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் பகுதிகளில் வசிப்போர் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று நிறுவனத்தின் விஞ்ஞானி குமாரி வீரசிங்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இந்த நான்கு மாவட்டங்களிலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆறு குழுக்கள் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக வலப்பனை, இரத்தோட்டை, பதுளை, கொத்மலை ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில தினங்களாக மலையகப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா, மகாவெவ பகுதியில் சுமார் 40 ஹெக்டேயர் நிலமும், தியனில்ல பகுதியில் 32 ஹெக்டேயர் நிலமும் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.

இதேபோல் கண்டி, பதுளை, மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மண்சரிவுகள் காரணமாக 1552 குடும்பங்களைச் சேர்ந்த 5886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரம் குடும்பத்தினர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

நுவரெலியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளர் லக்சிறி இந்திரதிலக்க கூறினார்.

கண்டி மாவட்டத்தின் பன்வில, குண்டசாலை, வந்தானை தோட்டம் போன்ற பிரதேசங்களிலிருந்து மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக சுமார் இருநூறு (200) குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக