17 ஜூன், 2011

100 இலங்கையர்கள் அமெ. செனட்டர்களுடன் சந்தித்துப் பேச்சு இலங்கையின் உண்மை நிலை குறித்து விளக்கம்

அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 100 இலங்கையர்கள் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கையின் உண்மை நிலையினை விளக்கியுள்ளதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப்பாடு குறித்தும் எடுத்துக் கூறினர்.

அமெரிக்க - இலங்கையர் தினமான திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனுசரணையுடன் அமெரிக்க செனட்டர்களை சந்திக்கும் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாத இயக்கமான எல். ரி. ரி. ஈயை அடிபணிய வைத்த பின்னர் நாடு பொருளாதார மற்றும் சமூக விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி அவர்கள் அமெரிக்க செனட்டர்களுக்கு ஆதாரபூர்வமாக விளக்கி கூறினார்கள். ஒரேநாளில் அமெரிக்க காங்கிரஸின் ஐந்தில் ஒரு உறுப்பினர்களை சந்தித்து விளக்கமளித்தமை ஒரு பாராட்டத்தக்க விடயமாகும்.

இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைப்பின் இணைத்தலைவரான ரொபட் எடர் ஓல்ட் அங்கு கருத்து தெரிவிக்கையில், 2004 சுனாமி அனர்த்தத்தை அடுத்து தாம் இலங்கைக்கு சென்று அங்கு ஏற்பட்ட பேரழிவை அவதானித்ததாக சொன்னார். இன்று இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைந்திருப்பதனால் இன்று நான் இலங்கைக்கு சென்றால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பார்த்து சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி கூட அடைய முடியுமென்று தெரிவித்தார்.

செனட் சபையின் மத்திய கிழக்கு, தென்கிழக்காசிய உப குழுவுக்கு தலைமை தாங்கும் ஹெண்டர் ஹோல் மற்றும் ஸ்டீவ் சார்பொட் ஆகியோர் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையருடன் பகற் போசனத்திலும் கலந்து கொண்டனர். கடந்த திங்களன்றே அமெரிக்காவில் முதற்தடவையாக இலங்கை, அமெரிக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொண்டுவரும் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் நிரந்தர சமாதானத்தை நிலை பெறச் செய்வதற்காகவும் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு விடுக்குமாறு அமெரிக்க செனட்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆசியாவிலுள்ள ஜனநாயக நாடுகளில் இலங்கையுடன் கடந்த 63 வருடங்களாக அமெரிக்கா 1948 ஆம் ஆண்டுமுதல் இராஜதந்திர உறவை வைத்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் 200 வருட காலமாக நீடித்து வருகின்றன. இலங்கையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பு பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றது. யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் வடபகுதியில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சம் கண்ணிவெடிகளை அகற்றுவதற் காக பெருமளவு நிதி உதவியையும் இயந்திர உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

வொஷிங்டனுக்கு வந்த புலம்பெயர்ந்த இலங்கையருக்கு அங்குள்ள இலங்கைத் தூதுவர் சாலிய விக்ரமசூரிய வரவேற்பு உபசாரம் ஒன்றை வழங்கி கெளரவித்தார். இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துரைத்தார். 2009 மே மாதத்தின் பின்னர் பயங்கரவாதிகளினால் ஒருவர் கூட மரணிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

2009 மே மாதத்தில் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியதன் பின்னர் நாட்டில் மனித உரிமைகளுக்கு மீண்டும் உத்தரவாதம் அளித்தது என்றும் மனித உரிமைகளுக்கு இனிமேல் எவ்வித ஆபத்தும் ஏற்படப்போவதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

அமெரிக்க செனட்டர்களை சந்தித்த புலம்பெயர்ந்த இலங்கையரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் பலர் இடம்பெற்றனர். இவர்கள் அமெரிக்காவில் 25 மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்ததனால் இலங்கையில் மீண்டும் சகஜநிலை ஏற்பட்டு இப்போது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக