5 ஜூன், 2011

இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.



இது ஒரு தனிமனித புகழ்ச்சியல்ல. எழுதவேண்டிய ஒன்றை எழுதவேண்டிய நேரத்திலேயே எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்ற குறிப்பு இது.
நேயல் நடேசன் என்ற எழுத்தாளர் ஒருவரை அவரது எழுத்துக்கள் ஊடாக சந்தித்திருக்கின்றேன்.
பின்னர் அவரது கட்டுரைகள் ஊடாக அவரது சமூக அக்கறையை கண்டிருக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவர்களின் வரலாற்றை எழுதியவர் டாக்டர் நோயல் நடேசன். அப்படி இவர் எழுதுகின்றபோதெல்லாம், பூனைகளையும் நாய்களையும் வெட்டுகின்ற ஒரு மிருகவைத்தியர் தேவையில்லாமல் அரசியல் பேசுகின்றார் என்று என்னுள் நினைத்ததுண்டு.
ஆனால் புலிகளின் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று அவர் முன்னரே எழுதியது அப்படியே நடந்தபோது ஆச்சரியமாகவும் இருந்தது.
2009 மார்ச் மாதத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இருபதுபேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள நிலைமைகள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள வைக்கப்பட்டபோது, அவரை நேரில் சந்திக்க முடிந்தது.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ அந்தந்த வழிகளில் உதவ விரும்பும் பலநூறு தமிழர்களில் ஒருவராக அவரை அப்போது பார்க்கமுடிந்தது.
இவ்வளவு விரைவாக யாழ். மண்ணில் கால்பதிக்க தன்னால் முடியும் என்று அவரே நினைத்திருப்பாரோ தெரியவில்லை.
மே 18க்கு பின்னர் தமது மண்ணில் முதல்தடவையாக அவர் கால்பதித்தபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் நான் பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.
பாதிக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுத்த பலரை பார்த்திருக்கின்றேன். மற்றவர்கள் இந்த மக்களுக்கு உதவவேண்டும் என்று எழுதிய பலரை, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்ற பலரை கண்டிருக்கின்றேன்.
ஆனால் அப்படி எழுதுவதுடன் நின்று விடாமல், செய்தும் காட்டியவர்கள் ஒரு சிலர்தான்.
தான் பிறந்த சிறிய தீவான எழுவைதீவு கிராமத்திற்கு அவர் நீண்டகாலத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு சென்றபோது, அவரை அவரது கிராமத்தவர்கள் வரவேற்றனர்.
'இந்தக் கிராமத்திற்கு நான் எதையாவது செய்யவேண்டும், உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவது என்ன?' என்று அவர் கிராமத்தவர்களை பார்த்து கேட்டபோது, அவர்கள் தயங்காமல் சொன்னது, 'எமக்கு அவசரம் தேவைப்படுவது ஒரு ஆஸ்பத்திரிதான். ஆதற்காக நாங்கள் ஒரு காணியை வாங்கவிருக்கின்றோம் நீங்கள் காணியை வாங்குவதற்கு பணஉதவி செய்யவேண்டும்' என்று அந்தக் கிராமத்து மீனவர் சங்கத்தினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர் எந்தவித தயக்கமோ அல்லது யோசனையோ இல்லாமல் அவர்களுக்கு சொன்னது, 'நீங்கள் காணியை வாங்குங்கள். நான் ஆஸ்பத்திரியை கட்டித்தருகின்றேன்.'.
கிராமத்தவர்கள் கூட அதனை நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.
ஆனால் அவர் எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியதும், கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடக்கியது ஆச்சரியமாக இருந்தது.
ஆஸ்பத்திரிகளைக் கட்டிக்கொடுக்கத்தானே அரசாங்கம் இருக்கின்றது. இந்த மனுசனுக்கு ஏன் தேவையில்லாதவேலை என்று என்னுள் நினைத்ததையும் இப்போதாவது பதிவுசெய்யத்தான் வேண்டும்.
கடந்த திங்கள் கிழமையன்று (மே 30) ஆஸ்பத்திரி கட்டிடத்தை முழுமையாக கட்டி அரசாங்கத்திடம் கையளித்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
சுமார் ஒரு கோடி செலவில் (கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியபோது 50 லட்சத்தில் கட்டி முடிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது 70, 80 என்று அதிகரித்து கட்டி முடிக்கப்பட்டபோது 100 ஆகிவிட்டது) கட்டிமுடிக்கப்பட்ட இந்த பணிக்கு கனடாவில் வாழும் எழுவைதீவு கிராமத்தவர்கள் சிலர் 4 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர். மிகுதிப் பணம் முழுவதையும் இவரது குடும்பமே செலவிட்டிருக்கின்றது.
மிகச்சிறப்பாக, எளிமையாக நடந்த அந்த வைபவத்தில் அவர் பேசியதைக் கேட்டபோது இத்தகைய ஒருவரின் நட்புவட்டத்திற்குள் இடம்பிடித்ததை நினைத்தபோதே ஒரு நெகிழ்ச்சியாக இருந்தது.
தனது சிறுபராயத்தில் இந்தக் கிராமத்தில் தான் வாழ்ந்தபோது, தனக்கு வருத்தம் வருகின்றபோது, தன்னை தனது தாயார் பக்கத்து தீவுகளுக்கு வைத்தியச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்ற கஸ்டங்களை நினைவுகூர்ந்த அவர், அந்த கஸ்டங்களை இன்றும் தனது கிராமத்தவர்கள் அனுபவிப்பதை எண்ணிப்பார்த்திருக்கின்றார்.
வழியில் நாம் நடந்துசெல்லும்போது கல் ஒன்று நமது காலில் இடித்துவிடுகின்றது. கால் விரலில் காயம். நாம் என்ன செய்கின்றோம். நமக்கு காலில் அடித்த கல்லை எடுத்து ஒரு கரையில் போட்டுவிடுகின்றோம். காலில் அடித்த கல் நமக்கு மீண்டும் அடிக்கப்போவதில்லை, ஆனாலும் அது மற்றவர் காலில் அடித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக்கல்லை எடுத்து கரையில் போடுகின்றோம்.
அதுபோலத்தான் இந்த ஆஸ்பத்திரியை நான் கட்டியதும் என்று நடேசன் அங்கு உரையாற்றியபோது கூறியது பலரையும் சிந்திக்கவைத்தது.
தமிழ் மக்களின் அவலங்களை காட்சிக்கு வைத்து பணம் பார்த்த பலர் இன்று அந்தப்பணத்திற்காக தத்தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். பல லட்சம் கோடி சொத்துக்களுக்காக இவர்கள் தமக்குள் மோதிக்கொண்டிருக்கின்றனர். யாரைக் காட்டி, யார் துயரங்களைக் காட்டி மக்களிடம் பணம்பார்த்தார்களோ அந்த மக்கள் இன்னமும் தமது எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை விமர்சிப்பவராக மாத்திரம் இல்லாமல், தனது கடமையை செய்யவேண்டிய நேரத்தில் செய்து காட்டிய நோயல் நடேசன், ஆஸ்பத்திரி திறப்புவிழாவை முடித்துக்கொண்டு எழுவைதீவை விட்டு வெளியேறியபோது, அந்தத் துறைமுகத்தில் காவல் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் கூறிய வார்த்தைகளைத் தான் என்னாலும் இப்போது கூறமுடியும்.
'இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.-

எஸ்.எஸ்.குகநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக