5 ஜூன், 2011

வெடிபொருள் மீட்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் சில பொருள்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டில் வெடிபொருள், கண்ணிவெடி அபாயமற்ற பகுதிகளென கூறப்பட்டு, மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் வெடிபொருட்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்திகரமான வகையினில் கண்ணிவெடியகற்றல் பணிகள் இடம்பெற்றதாவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் சில, கடந்த நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவன களப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக பாடசாலை சூழலினுள்ளும் பனை மரத்திலும் கூட இவ்வாறு வெடிக்காத எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்மராட்சியின் தனங்கிளப்பு, கோயிலாக்கண்டி மற்றும் மிருசுவில், எழுதுமட்டுவாள் பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றமை தொடர்பாக, தகவல்களை வழங்க பொதுமக்கள் பின்னடித்தே வருகின்றனர். இதனை காரணங்காட்டி, தம்மை அங்கிருந்து மீண்டும் வெளியேற்றிவிட படைத்தரப்பு முனையலாமென அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடமராட்சி கிழக்கிலும் அதே போன்று தென்மராட்சி மற்றும் பளை பகுதிகளிலும் கண்ணிவெடி அபாயத்தை காரணங்காட்டி பல கிராமங்களினில் இதுவரை மீள் குடியமர்வதற்கான அனுமதி படைத்தரப்பினால் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக