4 ஏப்ரல், 2011

நாடு கிரிக்கெட்டில் லயித்திருந்த போது விலை அதிகரிப்பு அருவருப்பானது



உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாடே லயித்திருந்த சந்தர்ப்பம் பார்த்து அரசாங்கம் தனது ஏமாற்று அரசியலை மீண்டும் வெளிக்காட்டி விட்டதாக விசனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தின் இந்த அருவருப்பான செயற்பாட்டினை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்து அனைத்து வகையிலும் மக்களின் தலைகளில் சுமையை சுமத்திவிட்டமையானது மிகவும் பாரதூரமானது.

எனவே ஏற்றிய விலைகளை அரசு உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கமானது மீண்டும் லிற்ரோ காஸின் விலையை 238 ரூபாவினால் அதிகரித்திருக்கின்றது. அதேபோல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அதிகரித்திருக்கின்றது. இந்த விலையேற்ற சுமையானது மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பினையடுத்து போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்க விருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின், சேவைகளின் விலைகள் அதிகரிக்க விருக்கின்றன. இவ்வாறு அனைத்துப் பிரச்சினைகளையும் மக்களே முகம் கொடுக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடையும் வரையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காதிருந்ததுடன் நாட்டு மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்து தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் மிகவும் சூட்சுமமாக எரிபொருட்களின் விலைகளை அரசு அதிகரித்திருக்கின்றது. நாட்டு மக்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் லயித்திருந்த சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் இவ்வாறு செய்திருக்கின்றது.

சந்தர்ப்பம் பார்த்து அரசாங்கம் இந்த விலை யேற்றத்தை செய்திருப்பதானது கிரிக்கெட் மோகத்திலிருக்கும் மக்கள் இதனை உணர மாட்டார்கள் என்ற நோக்கத்திலேயே ஆகும். இது ஒரு பாரதூரமான ஏமாற்றுத் திட்டமாகும். பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் முன்னதாகவே அறிவிப்பது இந்நாட்டின் சம்பிரதாயமாகவிருந்து வருகின்றது. ஆனால் இன்றைய அரசாங்கம் அந்த சம்பிரதாயத்தை முழுமையாக மீறி விட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாது, பொருட்களின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக எந்த வகையிலும் அரசு மக்களுக்கு அறிவித்தல் கொடுத்திருக்கவில்லை.

இதனால் சந்தைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்குச் செல்கின்ற பொதுமக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியவர்களாகி உள்ளனர். மேலும் தமிழ்சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்கள் எஞ்சியிருக்கின்ற நிலையிலே இந்த விலை அதிகரிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இலங்கை தேசத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலாசாரக் கொண்டாட்டமாகவே தமிழ் சிங்களப் புத்தாண்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் அதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக மேலும் மேலும் மக்களை சிரமத்துக்குள் தள்ளிவிடுவதாகவே காணப்படுகின்றது.

இந்த விலைவாசி அதிகரிப்பின் பின்னணியில் மக்களை மட்டுமல்லாது, அவர்களிடத்திலிருந்து அதிக அதிகமாக வரிகளை சுமத்தி அதிலிருந்து (கொமிஸ்) தரகினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கின்றது என்பது தெளிவாகிறது.தமிழ் சிங்களப் புது வருடத்தை முன்னிட்டு காஸ், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்டி வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் மக்களின் எண்ணங்கள் வேறு திசையில் திளைத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் கைக்கொண்ட விதத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது அதன் ஏமாற்று அரசியலை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றது. இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக