1 மார்ச், 2011

அநுராதபுர முதலாவது தேர்தல் பிரசார மாநாட்டில் ஜனாதிபதி எல்லைக்கிராமம் என்ற நாமம் அழிப்பு

ஜீவனோபாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவி
இயற்கை அனர்த்த பாதிப்பு பகுதிகளை கட்டியெழுப்ப நடவடிக்கை



வதந்திகளையும் பொய்ப் பிரசாரங்களையும் மேற்கொண்டு எதிர்க்கட்சி தமது வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தி வருகிறது. எதற்கும் சளைக்காது அரசாங்கம் இம்முறையும் அமோக வெற்றிபெறுவது உறுதியென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மக்கள் வழங்கிய பூரண ஆதரவினால் கடந்த சகல தேர்தல்களிலும் அரசாங்கம் அமோக வெற்றிபெற்றது. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அரசாங்கம் அமோக வெற்றிபெறும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு நாட்டின் சகல கஷ்டப் பிரதேசங்களையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எல்லைக் கிராமம் என்ற பெயருக்கு முடிவு கட்டியது போல் கஷ்டப் பிரதேசம் என்ற பெயருக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட ரீதியான முதலாவது தேர்தல் பிரசார மாநாடு நேற்று அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த, திஸ்ஸ கரலியத்த, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உட்பட பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

நாம் சகல தேர்தல்களின் போது பிரசாரப் பணிகளை அநுராதபுரம் புனித பூமியிலிருந்தே ஆரம்பித்துள்ளோம். அமோக வெற்றியையும் பெற்றுள்ளோம். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நாம் அமோக வெற்றிபெறுவது உறுதி.

கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ளோம். இத்தகைய சூழலில்தான் இயற்கை அனர்த்தங்கள் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இதனை வைத்து எதிர்க்கட்சியினர் எத்தகைய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இயற்கை அனர்த்தங் களை எம்மால் நிறுத்த முடியாது என்பது சகலரும் அறிந்ததே.

இயற்கை அனர்த்தங்களினால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. வயல் நிலங்கள் 45,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள், கால்நடைகள் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இவற்றின் மூலம் 50,000 மில்லியன் ரூபா நஷ்ட மேற்பட்டுள்ளது. னினும் பாதிப்புகளை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பலியான உயிர்களை விட ஏனைய அனைத்தும் மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கப்படும்.

இயற்கை அனர்த்தங்கள் எமக்குப் புதிய வையல்ல. சுனாமி பேரழிவின் பாதிப்புகளை இரண்டு வருடத்தில் மீள கட்டியெழுப்பிய எமக்கு இது பாரிய ஒரு விடயமல்ல. மக்களிடமும் எம்மிடமும் உள்ள ஆத்ம பலத்தின் மூலம் இப்பாதிப்புகளை சுலபமாக சரிசெய்ய முடியும். பாதிப்புற் றோருக்கு உதவுவது மட்டுமன்றி அன்றாட ஜீவனோபாய தொழில்களில் ஈடுபட்டு ள்ளோருக்கும் அரசாங்கம் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் யுத்தத்தை விற்றுப் பிழைப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவர். நாட்டைப் பிளவுபடுத்தி சர்வதேச நாடுகளில் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் இவர்கள். நாம் யுத்தம் செய்ததை ஏளனம் செய்தவர்கள் இவர்கள்.

நாம் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை வரலாற்றிலிருந்து அழித்துள்ளோம். அதேபோன்று கஷ்டப் பிரதேசங்கள் என்ற பெயருக்கும் முடிவு கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடித்தளமாக அமையும். அதற்காகவே இத்தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் கிராமப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஒரு இலட்சம் ரூபாவையாவது ஒதுக்கியதில்லை. நாம் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியை செலவிட்டு வீதி, கிராமம் என அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். எனினும் இத்தகைய அபிவிருத்தியைக் கண்டு எரிச்சல் படும் சக்திகளும் உள்ளன.

நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் என்பதை மக்கள் அறிவர். தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்கள் உள்ளனர். எனினும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றியுள்ளோம்.

எதிர்க்கட்சிக்கு அரசியல் நடத்த உரிமையுண்டு. காரியாலயங்களை அமைக்க உரிமையுண்டு. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்தே தேர்தல் நடத்துகிறோம்.

அரசாங்கம் வெற்றி பெறும் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் பல பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டார நாயக்கா சிலையையும் அப்பிரதேசத்தையும் விற்கப் போவதாக பிரசாரம் செய்கின்றனர். நாம் நாட்டின் வளங்களைப் பாதுகாப்பவர்கள் விற்பவர் களல்ல. இத்தகைய வீண் புரளிகளுக்கு நாம் சளைக்கமாட்டோம்.

மக்கள் ஆதரவு எமக்கு உள்ளது. கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறை தேர்தலிலும் வெற்றி பெறுவோம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக