29 மார்ச், 2011

கடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல்

லிபியத் தலைவர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால் கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களையெல்லாம் கடாபி கைப்பற்றினார். தற்போது நேட்டோ உதவியுடன் அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள்.

அந்த வரிசையில், தற்போதிருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதையடுத்து பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் திரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள் கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.-35 ரக ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் பிரிட்டன் போர் விமானங்கள் மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள் அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தின்படி லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நேற்று முன்தினம் முதல் நேட்டோ ஏற்றுக் கொண்டது. அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழு வேகத்துடன் தலைநகர் திரிபோலியை நோக்கி புயலாக வீசத்தொடங்கியிருக்கின்றன.

சிர்ட் நகரம் கடாபியின் கையை விட்டுப் போய்விட்டால் எதிர்ப்புப் படைகள் தடையின்றி திரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே கடாபியின் இறுதிக் கட்டப் போராக ஆகிவிடும் என்பதால் சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்றுக் கவனித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக