30 மார்ச், 2011

ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சுகவீனம் காரணமாக அவருக்கெதிரான ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் ஹைகோர்ப் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா சுகவீனமுற்றிருப்பதால் அவரை ஆஜர் செய்ய முடியவில்லை என்று தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை மருத்துவரின் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கை மே மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. அத்துடன் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டது.

ஹைகோர்ப் மோசடி வழக்கில் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்ய தற்போது சர்வதேச பொலிஸான இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தனது மருமகன் தனுன திலகரட்ணவுக்குச் சொந்தமான ஹைகோர்ப் கம்பனியிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்த போது கேள்வி பத்திர விதிமுறைகளை மீறி, இராணுவத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா மீது குற்றஞ் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக