மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (03) இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இடர் முகாமைத்துவ அமைச்சினால் மேலதிகமாக கோரும் தொகையினை பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பொது திறைசேரிக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களை பாதித்துள்ள கடும் மழையினை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, திறைசேரியால் மேலதிகமாக பத்து கோடி ரூபாவினை தமது அமைச்சிற்கு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
பிரதேச செயலாளர்கள் கேட்பதற்கிணங்க துரிதமாக நிதியினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எதுவித நிதித் தட்டுப்பாடும் இல்லையெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
வெள்ளம் காரணமாக வவுனியா மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியா வசிய உலர் உணவு வகைகள், சமைத்த உணவு, உடைகள், மருந்து வகைகள் உள்ளி ட்ட அதிகளவான பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகையானது ஐம்பதாயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறிய அமைச்சர் அமரவீர அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சகலவித நிவாரணங்களையும் வழங்குவதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக