வடக்கில் தொடரும் சட்டவிரோத சம்பவங்களின் பின்னணியில் விபசாரப் பெண்களும் போதைப்பொருள் பாவனையாளர்களுமே உள்ளனர். தற்போது குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவமும் பொலிஸாரும் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது "ஹெரோயின்' போன்ற ஆபத்தான போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைதானதுடன் விபசார நிலையங்கள் பலவும் முற்றுகையிடப்பட்டன. இவற்றின் பின்னணியில் உள்ளவர்களே யாழ். குடாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் கூறுகையில்,
வடக்கில் அண்மைக் காலமாக அச்சமான சூழலே காணப்படுகின்றது. ஏனெனில் கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் என பல்வேறு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இச் சம்பவங்களின் பின்னணியை கண்டறிவதிலும் சம்பவங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதிலும் அரசாங்கம் பலத்த சவால்களை எதிர்கொண்டது.
பாதுகாப்பு தரப்பினருடன் பல கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் பல இரகசிய நடவடிக்கைகள் வாயிலாகவும் இரவு நேரங்களில் பொலிஸாரும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட கூட்டு ரோந்து நடவடிக்கைகளினாலும் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்துள்ளது. தற்போது இருந்ததைவிட சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.
இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்படி விபசார நிலையங்களும் போதைப் பொருள் பாவனையுமே இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக போதைப்பொருள் பாவனையாளர்களே கூடுதலாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எவ்வாறாயினும் தற்போது யாழ். குடாவில் சுமுக நிலையை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக